2013-05-10 16:47:03

திருத்தந்தை பிரான்சிஸ் : உங்கள் சமூகங்களை ஏழைகளுக்குத் திறந்து விடுங்கள்


மே,10,2013. அன்பின் திருவருள்சாதனத்தால் தூண்டப்பட்டவர்களாய் உங்கள் சமூகங்களைத் திறந்துவிடுங்கள், ஏனெனில் சகோதரத்துவ கரத்தைத் தேடும் அனைவரும் சந்திக்கும் மற்றும் பிறரன்பின் இடங்களாக இவை மாறும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் “சகோதரத்துவத் தொண்டு 2013” என்ற தலைப்பில் நடைபெற்றுவரும் 3 நாள்கள் கருத்தரங்குக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, பிரான்ஸ் மக்கள் ஏழைகள்மீது கொண்டிருக்கும் கரிசனையை வெளிப்படுத்துவதாக இக்கருத்தரங்கு இருக்கும் என்று கூறியுள்ளார்.
இச்செய்தியை, திருப்பீடச்செயலர் கர்தினால் பெர்த்தோனே திருத்தந்தையின் பெயரால் அனுப்பியுள்ளார்.
அக்கருத்தரங்கில் கலந்துகொள்பவர்கள், பொருளாதார நெருக்கடிகள் நிறைந்த உலகத்தில், விசுவாசத்தால் தூண்டப்பட்டவர்களாய் படைப்பாற்றல் மிக்க அன்பினால் ஏழைகளுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று அச்செய்தியில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அருகிலும் தூரத்திலும் துன்பநிலையில் வாழும் மக்களோடு சகோதரத்துவ உணர்வுடன் வாழ்வதற்கு ப்ரெஞ்ச் ஆயர்கள் 2009ம் ஆண்டில் விடுத்த அழைப்பையொட்டி, 2011ம் ஆண்டில் ப்ரெஞ்ச் கத்தோலிக்கத் திருஅவையின் தேசிய சகோதரத்துவ அவை உருவாக்கப்பட்டது.
இவ்வவையில் பிரான்சின் ஏறத்தாழ அனைத்து மறைமவாட்டங்களும் நூற்றுக்கும் மேற்பட்ட இயக்கங்களும் துறவுசபை நிறுவனங்களும் சேர்ந்து செயல்பட்டு வருகின்றன.
இந்தத் தேசிய அவை லூர்து நகரில் இவ்வியாழனன்று மூன்று நாள்கள் கருத்தரங்கு ஒன்றைத் தொடங்கி நடத்தி வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.