2013-05-09 16:06:14

திருத்தந்தையின் மறையுரைகளில் திருஅவையின் துவக்ககாலம் சொல்லித்தரும் பாடங்கள்


மே,09,2013. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் தலைமைப் பணியை ஏற்று இருமாதங்கள் நிறைவுறவிருக்கும் இவ்வேளையில், அவர் ஒவ்வொருநாளும் காலையில் புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் நிறைவேற்றி வரும் திருப்பலிகளில் திருஅவையின் பண்புகளை தன் மறையுரைகளில் கூறி வருகின்றார்.
உயிர்ப்புக் காலத்திற்குப் பின்வரும் இந்நாட்களில், திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வழங்கப்பட்டு வரும் பகுதிகளை மையப்படுத்தி, திருஅவையின் துவக்ககாலம் நமக்குச் சொல்லித் தரும் பாடங்களை தன் மறையுரையில் கூறி வருகிறார் திருத்தந்தை.
திருஅவை ஒரு சமுதாயப் பணி அமைப்பு அல்ல, திரு அவை ஒரு செவிலித் தாயல்ல, மாறாக, ஓர் உண்மைத் தாய், சமுதாயத்தின் விளிம்புகளில் வாழ்வோரைத் தேடிச்செல்லும் திருஅவையே பொருளுள்ள திருஅவை என்ற எண்ணங்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரைகளில் வலியுறுத்தி வந்துள்ளார்.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் கூட்டப்பட்டதன் 50ம் ஆண்டைச் சிறப்பிக்கும் இந்த நம்பிக்கை ஆண்டில், திருஅவை இன்னும் எவ்வழிகளில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்ற கேள்வியை, திருத்தந்தை முன் வைத்துள்ளார்.
தூய ஆவியாரின் தூண்டுதல்களுக்குச் செவி மடுத்து, கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் மனித சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் பாலங்களைக் கட்ட அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் தன் மறையுரைகளில் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், கடவுளின் அன்பிலும் கருணையிலும் நம்பிக்கைக் கொள்ளும் மிக உன்னதக் கொடையை தூய ஆவியார் நமது உள்ளங்களுக்குத் தருகிறார் என்ற Twitter செய்தியை இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒன்பது மொழிகளில் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.