2013-05-09 16:08:34

ஐரோப்பா நாளையொட்டி ஐரோப்பிய ஆயர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தி


மே,09,2013. ஐரோப்பியக் கண்டத்தின் அனைத்து நாடுகளிலும் வாழும் மக்களுடன், சிறப்பாக, ஐரோப்பாவின் எதிர்காலத்தில் அதிகம் பங்கேற்கவிருக்கும் இளையோருடன் ஐரோப்பியத் திருஅவையும் பயணம் செய்கிறது என்று ஐரோப்பிய ஆயர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது.
மே மாதம் 9ம் தேதி, இவ்வியாழனன்று சிறப்பிக்கப்படும் ஐரோப்பா நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஆயர்கள் கூட்டமைப்பு, பொருளாதார நெருக்கடியாலும், வேறு பல பிரச்சனைகளாலும் சூழப்பட்டுள்ள ஐரோப்பிய மக்களுடன் திருஅவையும் இணைந்து பயணிக்கிறது என்று கூறியுள்ளது.
இரண்டாம் உலகப் போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் கழித்து, 1950ம் ஆண்டு பிரெஞ்ச் நாட்டின் வெளியுறவு அமைச்சர் Robert Schuman, ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் இணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற அழைப்பை விடுத்தார். அவர் விடுத்த அழைப்பின் விளைவாக உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாண்டு தன் 63ம் ஆண்டைக் கொண்டாடுகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் என்ற எண்ணத்தைத் தொடர்ந்து, 1971ம் ஆண்டு, ஐரோப்பாவின் 33 ஆயர்கள் பேரவைகளும் இணைந்து ஐரோப்பிய ஆயர்கள் கூட்டமைப்பை உருவாக்கின. ஐரோப்பிய ஆயர்கள் கூட்டமைப்பின் தற்போதையத் தலைவராகப் பணியாற்றுபவர் Esztergom-Budapest உயர்மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் Péter Erdõ அவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.