2013-05-08 15:51:22

மே 09, 2013. . கற்றனைத்தூறும்...... அன்னாசி


அழகான அமைப்புடைய அன்னாசிப்பழம் தோன்றியது தென் அமெரிக்க நாடான பிரேசிலில். அங்கிருந்து மேற்கிந்திய தீவுகளுக்குப் பரவியது. அன்னாசி என்ற பெயர் போர்த்துகீசிய மொழியில் இருந்து பெறப்பட்டது. இந்தியாவென்று எண்ணி மேற்கிந்திய தீவுகளுக்கு வந்த கொலம்பஸ், இந்த அன்னாசியை ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்றார். பதினாறாம் நூற்றாண்டில் இந்தப்பழம் உலகெங்கும் பரவியது. 1548ல் ஐரோப்பிய வியாபாரிகளால் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. இன்று ஹவாய்த் தீவுகளில்தான் அன்னாசி, உலகிலேயே அதிக அளவில் பயிரிடப்படுகிறது. உலக உற்பத்தியான 17 இலட்சத்து 50 ஆயிரம் டன்களில் 45 விழுக்காடு ஹவாய்த் தீவுகளில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் 25,000 ஹெக்டேர் பரப்பில் அன்னாசி பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் ஏறத்தாழ 36,635 டன் உற்பத்தி ஆகிறது.
இயற்கையின் கொடையான அன்னாசி பழத்தில் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ள இந்த அன்னாசிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச்சத்து, புரதச்சத்து மற்றும் இரும்புச் சத்துக்களை கொண்ட அன்னாசிப் பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். அன்னாசிப் பழம் பித்தத்தைக் குறைக்கும் தன்மை உடையது. இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. இரத்தக்குழாய் அடைப்புகளைப் போக்கும். கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ளது.
அன்னாசியில் புரோமெலைன் என்ற என்சைம் உள்ளது. தவிர வைட்டமின் ‘ஏ’ வும் ‘சி’ யும் செறிந்தது. அன்னாசி, குடலில் உள்ள புழுக்களை அழிக்கும். சிறுநீர் கற்களைக் கரைக்கும். நல்ல குரல் வளத்திற்கும், தொண்டைப்புண் அகலவும் அன்னாசி பயன்படும்.

ஆதாரம் : தினகரன்/தினத்தந்தி/சித்தர்கோட்டை








All the contents on this site are copyrighted ©.