2013-05-08 16:23:23

திருப்பீடத்திற்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும் நிதித்துறை தொடர்பான ஒப்பந்தம்


மே,08,2013. திருப்பீடத்தின் நிதி ஆய்வுத்துறை அதிகாரிகளுக்கும், நிதித்துறை தொடர்பான குற்றங்களைக் கண்காணிக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிகாரிகளுக்கும் இடையே, இச்செவ்வாயன்று அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலைநகரான வாஷிங்டனில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
கறுப்புப் பணத்தை வெளிச்சந்தைக்குக் கொணரும் முயற்சிகளைத் தடுக்கவும், தீவிரவாத குழுக்களுக்கு நிதி உதவிகள செய்யும் முயற்சிகளைத் தடுக்கவும் இவ்விரு அமைப்புக்களும் உழைக்கும் என்ற உறுதிப்பாட்டுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத் திடப்பட்டது என்று திருப்பீடச் செய்தி அலுவலகம் அறிவித்தது.
திருப்பீடத்தின் சார்பில் René Brülhart அவர்களும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் சார்பில் Jennifer Shasky Calvery அவர்களும் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, திருப்பீடமும், அமெரிக்க ஐக்கிய நாடும் உலகெங்கும் நிதித் துறையில் தெளிவான வழிமுறைகளை உருவாக்க ஒத்துழைப்பர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பீடத்தின் நிதி ஆய்வுத்துறை 2010ம் ஆண்டு முதல், பெல்ஜியம், இஸ்பெயின், சுலோவேனியா ஆகிய நாடுகளுடனும், தற்போது, அமெரிக்க ஐக்கிய நாட்டுடனும் இத்தகைய ஒப்பந்தங்களை நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.