2013-05-08 16:26:57

குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினர் இரண்டாம் தர குடிமக்களாய் நடத்தப்படுகின்றனர் - அருள் பணியாளர் செட்ரிக் பிரகாஷ்


மே,08,2013. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினர் இன்னும் இரண்டாம் தர குடிமக்களாய் நடத்தப்படுகின்றனர் என்று மனித உரிமை ஆர்வலரும், இயேசு சபை அருள் பணியாளருமான செட்ரிக் பிரகாஷ் கூறினார்.
அமெரிக்காவில் பணியாற்றும் அகில உலக சமயச் சுதந்திரம் கண்காணிப்புக் குழு இரு நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட ஓர் அறிக்கையில், மதச் சுதந்திரத்தைப் பொருத்தவரை இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதென்பதைச் சுட்டிக் காட்டியுள்ளது.
இவ்வறிக்கையைக் குறித்து, தன் கருத்துக்களை வெளியிட்ட அருள் பணியாளர் பிரகாஷ், மதமாற்றத் தடைச் சட்டம் என்ற பெயரில் குஜராத் மாநிலத்தில் பல்வேறு வேண்டத்தகாத அடக்கு முறைகள் அரசால் கடைபிடிக்கப்படுகின்றன என்று தெரிவித்தார்.
2002ம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரங்களுக்குப் பலியானவர்கள் இன்னும் தகுந்த நீதி கிடைக்காமல் துன்புறுகின்றனர் என்றும், கிறிஸ்தவ நிறுவனங்கள் காவல் துறையினரால் பல்வேறு தேவையற்ற சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன என்றும் அருள் பணியாளர் பிரகாஷ் கூறினார்.
2002ம் ஆண்டு கலவரங்களில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியின் ஈடுபாடு இருந்ததென்று, மோடி அவர்களுக்கு அந்நாட்டுக்குள் நுழையும் அனுமதியை அமெரிக்க ஐக்கிய நாடு மறுத்தது. அவருக்கு விதிக்கப்பட்ட தடை இன்னும் தொடரவேண்டும் என்று அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.