2013-05-07 16:15:54

மியான்மாரில் அமைதிக்கும் அன்புக்கும் யாங்கூன் பேராயர் வேண்டுகோள்


மே,07,2013. மியான்மாரில் முஸ்லீம்களுக்கும் புத்தமதத்தினருக்கும் இடையே இடம்பெறும் வன்முறை நாடு முழுவதும் காட்டுத்தீ போல் பரவி வருகின்றது என்று சொல்லி, நாட்டில் அமைதியும் அன்பும் கடைப்பிடிக்கப்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் யாங்கூன் பேராயர் Charles Bo.
கத்தோலிக்கரையும் பிரிந்த கிறிஸ்தவ சபையினரையும் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள மியான்மாரின் வடபகுதியை இவ்வன்முறை முதன்முறையாகப் பாதித்துள்ளது என்று ஆசியச் செய்தி நிறுவனத்திடம் கவலை தெரிவித்தார் பேராயர் Charles Bo.
அன்புச் சமூகமாக வாழ வேண்டுமென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் விடுத்த அழைப்பு மியான்மார் மக்களுக்கும் பொருந்தும் என்றுரைத்த பேராயர் Charles Bo, அந்நாட்டில் இடம்பெறும் இனவாத வன்முறைக்குத் தனது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.
இவ்வன்முறைகளில் 37 வழிபாட்டுத்தலங்களும் 1,227 வீடுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன மற்றும் அழிக்கப்பட்டுள்ளன. இவ்வழிபாட்டுத்தலங்களில் பெரும்பாலானவை மசூதிகள்.
இதற்கிடையே, வட மியான்மாரின் கச்சின் மாநிலத்தில் முஸ்லீம்களின் வியாபாரத்தைச் சேதப்படுத்திய வன்செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு இரு புத்தமதத்தினரைக் கைது செய்துள்ளனர் அந்நாட்டு அதிகாரிகள்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.