2013-05-07 15:58:33

திருத்தந்தை பிரான்சிஸ் : நல்ல கிறிஸ்தவர்கள், தங்களது துன்பங்களையும் சோதனைகளையும் குறைகூறாமல் ஏற்க வேண்டும்


மே,07,2013. தொடர்ந்து புகார் சொல்லிக்கொண்டே இருக்கும் கிறிஸ்தவர்கள், நல்ல கிறிஸ்தவர்களாய் இருப்பதிலிருந்து தவறுகின்றனர், அத்தகைய கிறிஸ்தவர்கள் குறைகூறும் கிறிஸ்தவர்களாய் மாறிவிடுகின்றனர் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நல்ல கிறிஸ்தவர்கள் தங்களது துன்பங்களையும் சோதனைகளையும் குறை சொல்லாமல் அமைதியாக ஏற்க வேண்டும், இவற்றைப் பொறுமையோடு ஏற்று கிறிஸ்துவின் மகிழ்வுக்குச் சாட்சி பகர வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.
இச்செவ்வாய்க்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலியில் இந்நாளின் முதல் வாசகத்தை (தி.ப.16,22-34) மையமாக வைத்து ஆற்றிய மறையுரையில் இவ்வாறு உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நற்செய்திக்குச் சாட்சி சொல்வதற்காகத் துன்புறுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட பவுல் மற்றும் சீலா போன்று கிறிஸ்தவர்கள் நிறைவான மகிழ்வோடு இருக்க வேண்டும், ஒருபோதும் வருத்தமாக இருக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
பவுலும் சீலாவும் இயேசுவின் துன்பங்களின் பாதையைப் பின்சென்றனர், அதனால் மகிழ்ச்சியாக இருந்தனர் என்று கூறிய திருத்தந்தை, நாம் பொறுமையாக இருக்க வேண்டும் என்று இயேசு நமக்குப் போதிக்கிறார், பொறுமையாய் இருப்பதென்பது வருத்தமாக இருப்பதல்ல, ஆனால் நமது இன்னல்களையும் கஷ்டங்களையும் நமது தோளில் ஏற்பதாகும், பல மறைசாட்சிகள் மகிழ்வோடு இருந்தனர் என்று கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செவ்வாய் காலை நிகழ்த்திய திருப்பலியில், வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.