2013-05-06 16:18:21

வாரம் ஓர் அலசல் – உன் அன்பு யாருக்கு?


மே,06,2013. RealAudioMP3 மே 04, கடந்த சனிக்கிழமையன்று அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டது. வெயிலின் உக்கிர தாண்டவம் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் இம்மாதம் 28ம் தேதி வரை நீடிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. சாலையோரக் கடைகளிலும் குளிர்பானக் கடைகளிலும் இளநீர், தர்பூசணி, மோர் மற்றும் பழச்சாறு விற்பனைகள் சூடுபிடித்துள்ளன. நீச்சல்குளங்கள், பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளுக்கு காலையிலேயே மக்கள் செல்ல ஆரம்பித்துவிட்டனர். வெயிலின் உக்கிரத்திலிருந்து, குறிப்பாக, குழந்தைகளையும் சிறாரையும் பாதுகாக்கும் வழிகளை மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகிறார்கள். ஏனெனில் குழந்தைகளும் சிறாரும் எதனாலும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள். அவர்களது உடலும் மனமும் மென்மையானவை. இதனாலேயே, உலகின் இந்த வருங்காலச் செல்வங்கள் நலனில் அனைவருமே அதிகம் அக்கறை காட்டுகிறார்கள். சிறார் தொழிலாளர், சிறார் வியாபாரம், சிறார் பாலியல் வன்செயல், சிறார் படைவீரர் உட்பட சிறார்க்கெதிரான வன்முறைகள் உலகின் எந்த மூலையில் நடந்தாலும் அவற்றை ஊடகங்கள் உடனுக்குடன் உலகினரின் கவனத்துக்குக் கொண்டு வருகின்றன. அதேபோல் இம்மாதிரியான வன்கொடுமைகளிலிருந்து சிறார் பாதுகாக்கப்படுவதையும் ஊடகங்கள் வெளியிடுவதற்குத் தவறுவதில்லை. மேற்கு ஆப்ரிக்க நாடாகிய கானாவில் மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் கொல்லப்படுவதிலிருந்து தப்பித்துள்ளனர் என்ற செய்தி கடந்த வாரத்தில்கூட (29 ஏப்ரல், 2013 BBC ) பிபிசியில் வெளியாகியது.
மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் தீய ஆவிகளால் பீடிக்கப்பட்டவை, இக்குழந்தைகள் தாங்கள் சார்ந்துள்ள சமூகத்துக்கு இன்னல்களைக் கொண்டு வருகின்றன என்ற ஒரு நம்பிக்கை கானா நாட்டின் வட பகுதியில் நிலவி வருகிறது. இதனால் இக்குழந்தைகள் கொல்லப்படும் வழக்கமும் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது. ஏதாவது ஒரு வகையில் மாற்றுத்திறனாளியாகும் இக்குழந்தைகளை வயதில் மூத்தவர்கள் விஷம் கொடுத்துக் கொலை செய்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் இவ்வாறு எண்ணற்ற குழந்தைகள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். அறியாமை, வறுமை போன்றவற்றின் காரணமாக நாட்டின் ஒதுக்குப்புறங்களில் வாழும் சமூகங்கள் மத்தியில் இப்பழக்கம் இருந்து வருகிறது. இவர்களது இப்பழக்கத்தை நீக்குவதற்கு பல ஆண்டுகளாக அரசு சாரா நிறுவனங்களும், கானா அதிகாரிகளும் முயற்சித்து வருகின்றனர். இவர்களது இந்த முயற்சிகளுக்குப் பலன் கிடைத்திருப்பதாகவே கடந்தவாரத்தில் வெளியான செய்தி மூலம் தெரிகிறது. அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் நடந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் உள்ளூர்த் தலைவர்கள், இந்தப் பழக்கம் தடை செய்யப்படுவதாகவும், ஒழிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளனர். அத்துடன் இந்தக் கொலைகளைச் செய்துவந்த முதியவர்களுக்குப் புதிய பணிகளையும் அத்தலைவர்கள் கொடுத்துள்ளனர். இனிமேல் இந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்தும் பணியைச் செய்ய வேண்டும் என்பதே அப்புதிய பணி. இந்த அறிவிப்பு அப்பகுதியின் இளம்தலைமுறைகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றது என்று பிபிசி செய்தியில் கூறப்பட்டிருந்தது. கானா என்றாலே “போரிடும் அரசர்” என்று பொருள். காலம் காலமாய் இருந்துவந்த இந்தப் பழக்கத்தை நிறுத்தியுள்ள உள்ளூர்த் தலைவர்கள் உண்மையிலேயே துணிச்சலான போர்வீரர்கள் என்று அவர்களை நாம் பாராட்டலாம்.
ஆயினும், செனெகல் நாட்டின் தெற்கில் சில பகுதிகளில், மாற்றுத்திறனாளிக் குழந்தைகளைக் கொலைசெய்யும் இதுபோன்ற பழக்கம் இன்னும் நடைமுறையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவில் கடந்த 2012ம் ஆண்டில், 1000 ஆண்குழந்தைகளுக்கு 940 பெண் குழந்தைகள் இருந்தனர் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கு 5,000 முதல் 7,000 ரூபாய்வரைக் கொடுத்தால், கருவில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா? என்பது உடனடியாகத் தெரிந்துவிடும் என்ற ஒரு செய்தியை இஞ்ஞாயிறன்று வாசித்தோம். சேலம் மாவட்டத்தில், கிராமப்புறங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இப்படி நடப்பதாகவும், இதைத் தடுக்க வேண்டிய அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு அவர்களுக்கு கையூட்டு கொடுக்கப்படுகின்றது எனவும் வாசித்தோம். தமிழகத்தில், மதுரை, திண்டுக்கல், தேனி, சேலம், கரூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில், பெண் சிசுக்கொலை அதிகப்படியாக இருந்தது. ஒரு பெண் குழந்தையைப் பெற்ற நிலையில், அடுத்தும் பெண் குழந்தை பிறந்தால், அதற்கு கள்ளிப்பால் ஊற்றிக் கொல்வதும், குழந்தையை வீதிகளில் வீசியெறிந்துவிட்டுச் செல்லும் கொடுமையும் நடந்தன. இவை குறைந்துவரும் சூழலில் தற்போதைய இந்நடவடிக்கையால் மீண்டும் பெண் சிசுக்கொலை அதிகரித்துவிடும் அபாயம் தெரிவதாக அஞ்சப்படுகிறது. கருவில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா? என்பதை தெரியப்படுத்தக்கூடாது என்ற ஓர் அரசு உத்தரவு இருந்தாலும் சில இடங்களில் இது மீறப்படுவது பலருக்கும் கவலையளிக்கின்றது.
வன்முறைக்குப் பலியாகும் சிறாருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் நாளாக, மே 05, இஞ்ஞாயிறை இத்தாலியின் “METER” என்ற கழகம் கடைப்பிடித்தது. இக்கழகத்தினருக்கு இஞ்ஞாயிறு நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில் சிறப்பான வாழ்த்துச் சொன்னார் திருத்தந்தை பிரான்சிஸ். உரிமை மீறல்களால் துன்புற்ற மற்றும் துன்புறும் சிறாரை நினைத்துப் பார்ப்பதற்கு இந்நாள் எனக்கு ஒரு வாய்ப்பைத் தந்துள்ளது. வலுவிழந்த ஒவ்வொரு மனிதரும், குறிப்பாக மிகவும் வலுவிழந்த சிறார் எப்பொழுதும் பாதுகாக்கப்பட்டு ஆதரவளிக்கப்படுவதற்கு நாம் அனைவரும் நம்மையே அர்ப்பணிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ RealAudioMP3 ். அன்பர்களே, இஞ்ஞாயிறு காலையில் மழை பெய்துகொண்டிருந்தாலும் அதனையும் பொருட்படுத்தாது வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட விசுவாசிகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இவ்வேண்டுகோளை செயல்படுத்துவார்கள், சிறார் வன்முறையிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என நம்புவோம்.
உடல், மனம் மற்றும் உணர்வுரீதியாகப் பல்வேறு வன்முறைகளால் பாதிக்கப்படும் சிறாருக்கு ஆதரவாகச் செயல்பட்டு, அவர்களின் உரிமைகள் காக்கப்படுவதற்கு அழைப்புவிடுக்கும் அனைத்துலக தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 4ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. UNHCR என்ற ஐ.நா.வின் அகதிகள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உலகில் கடந்த 20 ஆண்டுகளில் சண்டைகளில் 20 இலட்சத்துக்கு மேற்பட்ட சிறார் கொல்லப்பட்டுள்ளனர். ஏறக்குறைய ஒரு கோடிச் சிறாருக்கு இந்நிறுவனம் ஆதரவளித்துள்ளது. இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் குடும்பங்களில் இடம்பெறும் வன்முறைகளால் ஆண்டுதோறும் ஏறக்குறைய 80 ஆயிரம் சிறார் இறக்கின்றனர் எனத் தெரிகிறது. ILO என்ற அனைத்துலக தொழில் நிறுவனம் கடந்த திங்களன்று வெளியிட்ட புதிய அறிக்கையில், உலகில் 21 கோடியே 50 இலட்சம் சிறார் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். போஸ்ட்வானா, மலாவி, நமிபியா, தென்னாப்ரிக்கா, டான்சானியா, ஜிம்பாபுவே போன்ற ஆப்ரிக்க நாடுகளில் 50 முதல் 60 விழுக்காட்டு பெற்றோரை இழந்த சிறார் தங்களது தாத்தா பாட்டிகளுடன் வாழ்கின்றனர். எனவே சிறார் தொழில்முறையை ஒழிப்பதற்குச் சமூகப் பாதுகாப்பு இன்றியமையாதவை என்று கூறப்பட்டுள்ளது.
அன்பு நேயர்களே, இத்தாலியரான Maria Montessori (Maria Tecla Artemesia Montessori) பற்றி நாம் அறிந்திருக்கிறோம். இத்தாலியில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் பெண்ணாகிய இவர், சிறந்த கல்வியாளர் மற்றும் உளவியல் மருத்துவர். இவர் சிறு குழந்தைகளைப் பயிற்றுவிக்க ஒரு புதிய கல்விமுறையை உருவாக்கி 1907ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதியன்று உரோம் நகரில் தனது பள்ளியில் அதனை அறிமுகப்படுத்தினார். மே 6, Maria Montessori இறந்த நாள். இவரது கல்வி முறையின் பலனைப் பார்த்த பின்னர், ஐரோப்பா முழுவதும் இக்கல்விமுறை பயன்படுத்தப்பட்டது. 1939ம் ஆண்டு முதல் 1947ம் ஆண்டு வரை இந்தியாவிலும் இலங்கையிலும் இவர் பணியாற்றினார். இவரை நினைவுகூரும் இந்த நாளில் சிறாரின் நலனை மேம்படுத்த நாமும் ஏதாவது சிறு முயற்சியில் இறங்கலாமே. ஓய்வு நேரங்களில் ஏழைச் சிறாருக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கலாம், சிறு சிறு கைத்தொழில்களைக் கற்றுக் கொடுக்கலாம். அவர்களை மகிழ்ச்சிப்படுத்த ஏதாவது பொழுதுபோக்குகளில் அவர்களை ஈடுபடுத்தலாம். இந்த ஏழைச் சிறாரை, இயேசு குறிப்பிட்ட “தேவையில் இருப்பவர்கள்” என்று நாம் சொல்லலாம். தேவையில் இருப்பவர்களுக்கு கடவுளின் அன்பையும், கனிவையும் நாம் வழங்கவேண்டுமென்று இஞ்ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
RealAudioMP3 பெண் ஒருவர், தனது இன்பத்தைவிட பிறரது இன்பத்தையே பேரின்பமாகக் கருதி வாழ்ந்து வந்தார். அடுத்திருப்பவரை அன்பு செய்வதில் ஆழ்ந்த இன்பம் அனுபவித்தார். அன்று அப்பெண் தூங்கிய அறையில் வெண்ணொளி உண்டாயிற்று. விழித்தெழுந்த அந்தப் பெண்ணின் முன்னால் வெண்ணிற உடையில் ஒரு தேவதை ஒரு பொன்னிறப் புத்தகத்தோடு நின்று கொண்டிருந்தது. அது என்ன என்று அப்பெண் கேட்டார். இதுதான் கடவுளன்புப் புத்தகம். யாரெல்லாம் கடவுளை அன்பு செய்கிறார்களோ அவர்களது பெயர்களெல்லாம் இதில் இருக்கும் என்றது அத்தேவதை. அப்படியா, அதில் எனது பெயர் இருக்கிறதா என்று கேட்டார் அப்பெண். புத்தகத்தைப் புரட்டிப் பார்த்த தேவதை இல்லை என்றது. அது சரி. கடவுளை நினைத்துப் பார்க்க எனக்கு ஏது நேரம். சக மனிதரை அன்பு செய்வதற்கே நேரம் சரியாய் இருக்கின்றது. பரவாயில்லை என்று சொல்லிவிட்டு மீண்டும் தூங்கினார் அப்பெண். மீண்டும் அவ்வறையில் வெண்ணொளி, மீண்டும் அதே தேவதை கையில் இன்னொரு பொன்னிறப் புத்தகத்தோடு. இது என்ன வேறு புத்தகமா என்று அப்பெண் கேட்டார். அதற்கு அத்தேவதை, ஆமாம். இது மனித அன்புப் புத்தகம். யார் யாரையெல்லாம் கடவுள் அன்பு செய்கிறாரோ, அவர்களது பெயர்களெல்லாம் இதில் இருக்கும் என்றது. தொடர்ந்து சொன்னது தேவதை. பெண்ணே, இதில் உம் பெயர்தான் முதல் பெயர் என்றது. ஆம். அன்பர்களே, பிறரன்பு வழிதான் கடவுளன்பு. மனிதத்தை மறுப்பவர் கடவுளையே மறுக்கிறார். எனவே, அன்பு செய்து, சிறப்பாக, சமுதாயத்தில் வலுவிழந்தவர்களை அன்பு செய்து வாழ்வோம்.








All the contents on this site are copyrighted ©.