2013-05-06 17:00:34

திருத்தந்தை : சுதந்திரம் என்பது, வாழ்வில் நல்ல முடிவுகளை எடுப்பதைக் குறிப்பிடுகின்றது


மே,06,2013. சுதந்திரம் என்பதன் அர்த்தம் நமக்குத் தேவையில்லாததை எல்லாம் சன்னல் வழி தூக்கி எறிவதைக் குறிக்கவில்லை, மாறாக, வாழ்வில் நல்ல முடிவுகளை எடுப்பதைக் குறிப்பிடுகின்றது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் நகரின் புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயத்தில் இம்மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று விசுவாசிகளோடு இணைந்து ஜெபமாலை செபித்த திருத்தந்தை, அதன்பின் மக்களுக்கு ஆற்றிய உரையில், நாம் வளர்வதற்கும், வாழ்வை எதிர்கொள்வதற்கும், சுதந்திரமாகச் செயல்படுவதற்கும் நம் நல்ல அன்னையாம் மரியா உதவுவாராக என வேண்டினார்.
நம் நலத்திற்கு காவலராக இருக்கும் அன்னை மரியா, தன் குழந்தைகளின் நலன் குறித்து அக்கறையுள்ளவராகச் செயல்படுவதுடன், குணப்படுத்துவது குறித்தும் தெரிந்தவராக இருக்கிறார் என்றார் பாப்பிறை.
தன் குழந்தைகள் நன்முறையில் வளரவேண்டும் என்பதில் ஆர்வமுடைய அன்னை மரியா, நாம் சோம்பேறித்தனத்திற்கு நம்மை கையளிக்காமலும், எளிதான ஒரு சுக வாழ்வை நாடி ஓடாமலும், நுகர்வுக்கலாச்சாரத்திற்கு அடிமையாகாமலும், நம் பொறுப்புணர்வுகளை உணர்ந்து செயல்பட உதவுகிறார் என்றார் திருத்தந்தை.
நம் வளர்ச்சியில் நம்மோடு துணைவரும் அன்னை மரியா, நாம் சுதந்திரமாக சில முடிவுகளை எடுப்பதற்கும் நமக்கு உதவுகிறார் என மேலும் கூறினார் திருத்தந்தை

ஆதாரம் வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.