2013-05-06 16:10:39

கற்றனைத்தூறும்..... ஃ பூஜி எரிமலை


ஜப்பானின் ஹோன்ஷூ (Honshu) தீவிலுள்ள ஃபூஜி எரிமலை அந்நாட்டிலேயே மிக உயர்ந்த மலையாகும். இது, 3,776.24 மீட்டர் (12,389அடிகள்) உயரமுடையது. கூம்பு வடிவத்தில் எல்லாப் பக்கங்களிலும் சமச்சீராக, சிகரத்தில் பனி படர்ந்து பார்ப்பதற்கு மிக அழகாக இது காட்சியளிக்கின்றது. 300 ஆண்டுகளுக்கு முன்னர் (1707-08) இந்த ஃபூஜி எரிமலை வெடித்துள்ளது. டோக்கியோவுக்கு தென்மேற்கே ஏறக்குறைய 100 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த ஃபூஜி எரிமலையை டோக்கியோவிலிருந்தே பார்க்கலாம். ஜப்பானிலுள்ள மூன்று புனித மலைகளில் ஃபூஜி எரிமலையும் ஒன்று. Tate, Haku ஆகிய மலைகள், அந்நாட்டின் மற்ற இரண்டு புனித மலைகளாகும். இந்த ஃபூஜி எரிமலையின் இயற்கை அழகு, இது அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் போன்றவற்றை வைத்து இதனை, உலகப் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறிவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது யுனெஸ்கோ நிறுவனம். வருகிற ஜூன் மாதத்தில் இவ்வறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மலை, ஜப்பானிய வரலாற்றுக் கலைப்படைப்புகளில் அதிகமாகப் பேசப்பட்டுள்ளது. ஜப்பானில் 12 கலாச்சார மையங்களும், 4 இயற்கைப் பகுதிகளும் உலகப் பாரம்பரிய இடங்களாக ஏற்கனவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஃபூஜி என்றால் “செல்வம்” அல்லது “ஏராளமான” என்று அர்த்தம். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், (1913,1919,1923) இந்த ஃபூஜி எரிமலையில் பலர் ஏறி அதன் சிகரத்தை எட்டியிருக்கின்றனர். “ஃபூஜி எரிமலையில் ஒருதடவை ஏறாதவர் முட்டாளாய் இருப்பார், இரண்டு தடவை ஏறியவர் முட்டாள்” என்ற சொல்வழக்கு ஜப்பானில் நிலவி வருகிறது.

ஆதாரம் : விக்கிப்பீடியா







All the contents on this site are copyrighted ©.