2013-05-04 15:41:13

திருத்தந்தை பிரான்சிஸ் : சாந்தம் மற்றும் மனத்தாழ்மையுடன் தீமையை எதிர்த்துப் போராட வேண்டும்


மே,04,2013. நாம் எப்பொழுதும் சாந்தம் மற்றும் மனத்தாழ்மையைக் கொண்டிருந்து, இவ்வுலகின் வெற்று வாக்குறுதிகளையும் வெறுப்பையும் எதிர்த்து வெல்ல வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இச்சனிக்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில், கிறிஸ்துவின் அன்புக்கும், இவ்வுலகின் வெறுப்புக்கும் இடையேயான போராட்டம் குறித்து விளக்கியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வுலகின் வெறுப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு மனத்தாழ்மை, சாந்தம் ஆகிய ஆயுதங்களை நாம் கொண்டிருக்க வேண்டும் என்று இம்மறையுரையில் கூறிய திருத்தந்தை, இவ்வுலகம் உங்களை வெறுக்கும்போது பயப்பட வேண்டாம், ஏனெனில் அது என்னையும் வெறுத்தது என்று இயேசு கூறியதையும் குறிப்பிட்டார்.
கிறிஸ்தவர்களின் பாதை இயேசுவின் பாதை என்றும், இயேசுவை நாம் பின்பற்ற விரும்பினால் உலகின் வெறுப்பை நாம் எதிர்கொள்ள வேண்டுமென்று கூறிய திருத்தந்தை, உலகம் அதற்குரியதை அன்புசெய்யும் என்றும் கூறினார்.
சாத்தான் நாம் மீட்படைவதை வெறுக்கிறான், இதனாலேயே திருஅவை தொடக்கமுதல் இன்றுவரை வெறுப்பையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு வருகின்றது, முந்தையக் காலங்களைவிட இந்த நாளில், இந்த நேரத்தில் துன்புறுத்தப்படும் கிறிஸ்தவ சமூகங்கள் பல உள்ளன என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இன்று மனிதர் மத்தியில் உரையாடல் தேவைப்படுகின்றது, இது அமைதிக்கு அவசியமானது என்று கூறினார்.
திருப்பீட ஆயர்கள் பேராயச் செயலர் பேராயர் Lorenzo Baldisseri, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சேர்ந்து இச்சனிக்கிழமை காலையில் திருப்பலி நிகழ்த்தினார். இத்திருப்பலியில் சுவிஸ் கார்ட்ஸ் வீரர்களில் சிலர் கலந்து கொண்டனர். இத்திருப்பலியின் முடிவில் இவ்வீரர்களிடம் திருத்தந்தை, திருஅவை உங்களை அதிகம் அன்புசெய்கின்றது, அதேபோல் நானும் உங்களை அதிகம் அன்புசெய்கின்றேன் என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.