2013-05-04 15:03:38

கற்றனைத் தூறும் - உலக அரசுகளின் இராணுவச் செலவு


Stockholm International Peace Research Institute (SIPRI) என்பது உலக அமைதியை வலியுறுத்திவரும் ஓர் உலக ஆய்வு மையம். ஒவ்வோர் ஆண்டும் உலகின் அரசுகள் இராணுவத்திற்குச் செலவிடும் தொகையினை இந்த மையம் வெளியிட்டு வருகிறது. 2012ம் ஆண்டில் உலக அரசுகள் இராணுவத்திற்கு செலவிட்ட விவரங்களென SIPRI வெளியிட்டுள்ள பட்டியலில், அமெரிக்க ஐக்கிய நாடு, சீனா, இரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களைப் பெற்றுள்ளன. இந்தியா 8வது இடத்தைப் பெற்றுள்ளது.
உலகின் அனைத்து நாடுகளும் இணைந்து 2012ம் ஆண்டில் இராணுவத்திற்கு செலவிட்டத் தொகை 1753 பில்லியன் டாலர்கள். அதாவது, 1,75,300 கோடி டாலர்கள். உலகெங்கும் இராணுவங்களுக்கென ஒவ்வொரு நாளும் செலவாகும் தொகை குறைந்தது 4.8 பில்லியன் டாலர்கள். உலகில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் இத்தொகை பிரித்து அளிக்கப்பட்டால், ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு குறைந்தது 250 டாலர்கள் கிடைக்கும். அண்மையில் பங்களாதேஷில் நிகழ்ந்த கட்டிட இடிபாட்டு விபத்தில் இறந்த தொழிலாளிகள் பெற்றுவந்த மாத ஊதியம் 38 டாலர்கள் என்பதை இங்கு நினைவுகூர்வது நல்லது. இராணுவங்களுக்கென ஒவ்வொரு நாளும் செலவாகும் தொகையில் 5 விழுக்காடு மட்டும் செலவழிக்கப்பட்டால், 2015ம் ஆண்டுக்குள் திட்டமிடப்பட்டுள்ள மில்லென்னிய இலக்குகளை எளிதில் அடைய முடியும் என்று ஐ.நா. அறிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.