2013-05-04 15:51:59

ஆப்கான் எல்லைக்கு அருகில் 13 ஆயிரம் பாகிஸ்தான் குடும்பங்கள் புலம்பெயரக்கூடும், ஐ.நா. எச்சரிக்கை


மே,04,2013. ஆப்கானிஸ்தானின் எல்லைக்கு அருகிலுள்ள வட பாகிஸ்தானில் ஆயுதம் ஏந்திய புரட்சிக்குழுக்களுக்கு இடையே மோதல்களும், அரசின் இராணுவ அடக்குமுறைகளும் தொடர்ந்து இடம்பெற்று வந்தாலும், மக்கள் புலம்பெயர்வது அதிகரிக்கக்கூடும் என்று ஐ.நா.வின் அவசரகால இடர்துடைப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது.
வட பாகிஸ்தானின் Tirah பள்ளத்தாக்கில் கடந்த மார்ச் மாதத்தின் பாதியிலிருந்து ஏறக்குறைய 13 ஆயிரம் குடும்பங்களின் 76 ஆயிரம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் பேச்சாளர் Jens Laerke கூறினார்.
சண்டைகளால் பாதிக்கப்பட்டுள்ள இப்பகுதியிலிருந்து விரைவில் இன்னும் அதிகம் மக்கள் வெளியேறக்கூடும் எனவும், இதனால் நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ள மக்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 20 ஆயிரத்தை எட்டக்கூடும் எனவும் பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் கணித்துள்ளனர்.
பாகிஸ்தானின் பழங்குடி இனத்தவர் வாழும் Tirah பள்ளத்தாக்கில் புரட்சியாளர்களை ஒடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட 2008ம் ஆண்டிலிருந்து மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.