2013-05-04 15:48:53

West Bankல் பிரிவினைச் சுவருக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு பாலஸ்தீனியக் கிறிஸ்தவர்கள் திருத்தந்தைக்கு வேண்டுகோள்


மே,04,2013. பாலஸ்தீனாவின் West Bankல் பிரிவினைச் சுவரைக் கட்டுவது குறித்த இஸ்ரேலின் திட்டத்தை தடுத்து நிறுத்துமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைக் கேட்டுள்ளனர் பாலஸ்தீனியக் கிறிஸ்தவர்கள்.
பெத்லகேமுக்கு அருகிலுள்ள Beit Jala நகரின் கிறிஸ்தவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு எழுதியுள்ள திறந்த கடிதத்தில், நீதியும் அமைதியும் இன்னும் இயலக்கூடியதே என்ற தங்களது நம்பிக்கையைத் தொடர்ந்து உயிரூட்டம் பெறச்செய்வதற்கு உதவியாக திருத்தந்தையிடம் இந்த வேண்டுகோளை முன்வைப்பதாக கூறப்பட்டுள்ளது.
எருசலேம் மற்றும் பிற புனித இடங்களிலிருந்து பெத்லகேமைப் பிரிக்கும் சுவரை, பாலஸ்தீனியப் பகுதியை ஆக்ரமித்திருக்கும் இஸ்ரேல் இராணுவம் ஏற்கனவே கட்டத் தொடங்கியுள்ளது எனவும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
170 ஹெக்டேர் அளவுள்ள Cremisan பள்ளத்தாக்கு வழியாகப் பரிவினைச் சுவரைக் கட்டுவதற்கு ஆதரவாக கடந்த வாரத்தில் இஸ்ரேல் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. இந்தப் பள்ளத்தாக்கின் நிலப்பகுதியிலும், அங்குள்ள திராட்சைத் தோட்டங்களிலும் Beit Jala நகரின் பல கிறிஸ்தவர்கள் வேலை செய்கின்றனர்.
இதற்கிடையே, பிரிவினைச் சுவர்களைக் கட்டுவது சட்டத்துக்கு முரணானது என்று 2004ம் ஆண்டில் அனைத்துலக நீதியியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.