2013-05-03 16:22:27

திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவையும் அனைத்துக் கிறிஸ்தவர்களும் விசுவாசத்தை அறிவிப்பதற்குத் துணிச்சலைக் கொண்டிருக்க வேண்டும்


மே,03,2013. திருஅவையும், அனைத்துக் கிறிஸ்தவர்களும் விசுவாசத்தை, உயிர்த்த இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தை வழங்குவதற்குத் துணிச்சலைக் கொண்டிருக்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
துணிச்சலை இழக்கும்போது திருஅவை வெதுவெதுப்பான சூழலில் நுழைகின்றது, துணிச்சல் இல்லாமல் வெதுவெதுப்பாகவுள்ள அரைகுறைக் கிறிஸ்தவர்கள் திருஅவையைப் புண்படுத்துகின்றனர் என்று கூறினார் திருத்தந்தை.
இன்றைய சமுதாயத்தில் கிறிஸ்தவர்களாகிய நாம் துணிச்சலுடன் இருக்க வேண்டும் என்பது குறித்து இவ்வெள்ளியன்று காலை நிகழ்த்திய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கூறினார்.
ஏனெனில் வெதுவெதுப்பான சூழல், பிரச்சனைகளை நம் மத்தியில் உருவாக்குகின்றது, அதனால் இறைவனை நோக்கிச் செபிப்பதற்கு நம்மில் துணிச்சல் இல்லாமல் போய்விடுகின்றது, பொறாமைகள், தன்னலம், எரிச்சல் போன்றவையும் நம்மில் முன்னோக்கிச் செல்கின்றன, இவை திருஅவையின் நன்மைக்கு நல்லதல்ல என்றும் திருத்தந்தை கூறினார்.
நாம் அனைவரும் பெற்றுள்ள விசுவாசத்தை நம் வாழ்வாலும் வார்த்தையாலும் அறிவிக்க வேண்டும், இதற்கு அடிப்படையாகத் தேவையான துணிச்சல் என்னும் அருளை இயேசுவிடம் கேட்க வேண்டுமென்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீட சமூகத்தொடர்பு அவைத் தலைவர் பேராயர் Claudio Maria Celli, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் சேர்ந்து இவ்வெள்ளியன்று காலை கூட்டுத்திருப்பலி நிகழ்த்தினார். சுவிஸ் கார்ட்ஸ் எனப்படும் திருத்தந்தையின் மெய்க்காப்பாளர் படைத்தளபதி Daniel Rudolf Anrigம், மெய்க்காப்பாளர்களும் இத்திருப்பலியில் கலந்து கொண்டனர்.
1527ம் ஆண்டில் உரோம் சூறையாடப்பட்டபோது திருத்தந்தையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்ட 189 சுவிஸ் படைவீரர்களில் 147 பேர் கொல்லப்பட்டனர். இது நடந்த மே 6ம் தேதியன்று ஆண்டுதோறும் வத்திக்கானில் புதிய சுவிஸ் கார்ட்ஸ் பணியில் சேர்க்கப்படுகின்றனர்.
திருஅவை மற்றும் திருத்தந்தைக்குப் பிரமாணிக்கத்துடன் இருந்து, அழகான சாட்சியத் தொண்டுகளை இந்த சுவிஸ் கார்ட்ஸ் ஆற்றி வருகின்றனர் என்று சொல்லி, அவர்களுக்குச் சிறப்பான வாழ்த்துக்களை இத்திருப்பலியின் முடிவில் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.