2013-05-02 16:09:17

புத்த திருநாளான Wesak நாளுக்கென பல்சமய உரையாடல் திருப்பீட அவை வெளியிட்டுள்ள செய்தி


மே,02,2013. உயிர்களுக்கு மதிப்பளிக்கும் அடிப்படையில் எழுப்பப்பட்டுள்ள புத்த மதத்தைப் பின்பற்றும் அனைவருக்கும் கத்தோலிக்கத் திருஅவையின் அன்பு வாழ்த்துக்கள் என்று பல்சமய உரையாடல் பணியில் ஈடுபட்டுள்ள திருப்பீட அவை, புத்த மதத்தினருக்கு வாழ்த்துக்களை அனுப்பியுள்ளது.
மேமாதத்தில் நிகழும் முழு நிலவு நாளையொட்டி கொண்டாடப்படும் புத்த திருநாளான Wesak நாளுக்கென பல்சமய உரையாடல் பணி திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Jean Louis Tauran வெளியிட்டுள்ள செய்தியில், மனித உயிரை அன்பு செய்து, மதித்து, காப்பாற்றுதல் என்பது மையப்பொருளாக அமைந்துள்ளது.
உலக உயிர்களையும், சிறப்பாக, வறுமையில் இருக்கும் மனிதர்களையும் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து சமயங்களும் இணைந்து செயல்படவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் தலைமைப் பணியின் துவக்கத்திலிருந்து சொல்லி வருவதை கர்தினால் Tauran தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்களைக் காக்கவேண்டும் என்பது பழம்பெரும் மதங்கள் அனைத்திலும் சொல்லப்பட்டிருந்தாலும், உயிர்களுக்கு எதிராகச் செயலாற்றும் தீய சக்திகள் உலகில் வளர்ந்து வருவதைக் காணமுடிகிறது என்றும், இச்சக்திகளுக்கு எதிராக நாம் உயிர்களைக் காக்கும் பணியில் இன்னும் தீவிரமாக ஈடுபட அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் இச்செய்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இம்மாதம் 23ம் தேதி முதல் 26ம் தேதி முடிய உலகின் பல நாடுகளில், சிறப்பாக, ஆசியாவின் அனைத்து நாடுகளிலும் Wesak புத்த விழா கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.