2013-05-02 16:11:02

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்கள் நாட்டுக்கு வருவது மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது – பிரேசில் சேரி மக்கள்


மே,02,2013. "உண்மைக்காகவும், அநீதிக்கு எதிராகவும் போராடும் மக்களுடன் கத்தோலிக்கத் திருஅவை தன்னையே இணைத்துக்கொள்ளும்" என்று முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் தங்களைச் சந்தித்தபோது கூறிய வார்த்தைகளை ரியோ டி ஜெனீரோ நகரின் சேரி ஒன்றில் வாழும் ஒரு கத்தோலிக்க கோவில் பணியாளர் கூறினார்.
1980ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் பிரேசில் நாட்டுக்கு மெய்ப்புப் பணி பயணம் மேற்கொண்டபோது, ரியோ டி ஜெனீரோ நகரின் Vidigal என்ற சேரியைப் பார்வையிட்டபோது, அவர்களுக்குத் தான் அணிந்திருந்த மோதிரத்தைப் பரிசளித்தார் என்று அச்சேரியின் கோவிலில் பணியாற்றும் Carlos Rojas, CNS செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
ஜூலை மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிரேசில் நாட்டுக்கு வருவது தங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது என்று திருவாளர் Rojas எடுத்துரைத்தார்.
கடற்கரையைப் பார்த்த வண்ணம் அமைந்துள்ள ஒரு மலைச்சரிவில் Vidigal சேரி அமைந்திருப்பதால், தற்போது பன்னாட்டு நிறுவனங்களின் கவனத்தை அது ஈர்த்துள்ளது என்றும், அங்குள்ள ஏழைகளை அப்புறப்படுத்தும் முயற்சிகளில் இந்நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன என்றும் திருவாளர் Rojas கூறினார்.
ஏழைகள் மீது அக்கறை கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சொற்கள் திருஅவையின் எண்ணங்களை ஏழைகள் மீது திருப்பியுள்ளது குறித்து திருவாளர் Rojas தன் மகிழ்வையும் வெளியிட்டார்.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.