2013-05-01 15:54:25

திருத்தந்தை - கடுமையான உழைப்பை மனிதர்கள் மீது சுமத்தும் சமுதாயம் நீதியான சமுதாயம் அல்ல


மே,01,2013. உழைப்பே மனிதர்களுக்கு உண்மையான மாண்பைத் தரும், அதிகாரமோ, பணமோ இந்த மாண்பைத் தராது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
உழைப்பாளரான புனித யோசேப்பு திருநாளான மேமாதம் முதல் தேதியன்று பிறரன்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் "பாலம்" என்ற குழுவினருக்கு, புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலியாற்றியத் திருத்தந்தை, உழைப்பின் உயர்வு குறித்தும், உழைப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் மறையுரையாற்றினார்.
இப்புதன் திருப்பலியில் வாசிக்கப்பட்ட தொடக்க நூல் மற்றும் மத்தேயு நற்செய்தி பகுதிகளின் அடிப்படையில் தன் கருத்துக்களைப் பகிர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், படைப்பை உருவாக்க இறைவனும் உழைத்தார் என்பதை எடுத்துரைத்தார்.
அண்மையில் பங்களாதேஷில் இடம்பெற்ற கட்டிட இடிபாட்டில் இறந்தோரைக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, அத்தொழிலாளிகள் பெற்றுவந்த ஒரு மாத ஊதியம் 38 யூரோவுக்கும் குறைவு என்பதை அறிந்து தான் வேதனை அடைந்ததாகவும், இதுவே இன்றைய உலகில் அடிமைத்தனம் என்றும் குறிப்பிட்டார்.
உழைக்கும் தொழிலாளிகளைக் காட்டிலும், அவர்கள் உருவாக்கும் பொருள்கள் அதிக மதிப்பு பெறுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதர்கள் அனைவருக்கும் வேலை கொடுக்காமல் இருக்கும் சமுதாயமும், கடுமையான உழைப்பை மனிதர்கள் மீது சுமத்தும் சமுதாயமும் நீதியான சமுதாயம் அல்ல என்பதை வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.