2013-05-01 15:25:28

அன்னைமரியா திருத்தலங்கள் – நல்லாலோசனை மரியா திருத்தலம், இத்தாலி
(The Shrine of Our Lady of Good Counsel of Genazzano)


மே01,2013. நல்லாலோசனை அன்னைமரியா குறித்து இருவிதமான வரலாறுகள் சொல்லப்படுகின்றன. ஒன்று அல்பேனிய நாட்டின் Shkodra அன்னை மரியா அதாவது நல்லாலோசனை அன்னைமரியா. இரண்டாவது இத்தாலியின் Genazzano நல்லாலோசனை அன்னை மரியா. அக்காலத்தில் அல்பேனியர்கள் அன்னைமரியா மீது அளவற்ற பக்தி கொண்டு நாடு முழுவதும் எண்ணற்ற அன்னைமரியா ஆலயங்களையும் சிற்றாலயங்களையும் கட்டியிருந்தனர். மலைகளின் சரிவுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் இவற்றைக் கட்டினர். மலர்களாலும் பச்சை மரங்களாலும் இவற்றை அழகுபடுத்தினர். இம்மரியா ஆலயங்களில் ஒன்று Shkodraவின் Illyrian பழைய கோட்டைக்குக்கீழ் இருந்த Shkodra மரியா ஆலயம். இவ்வாலயத்தின் முக்கிய பீடச் சுவரில் அழகாக வரையப்பட்ட ஓர் அன்னை மரியா படம் மாட்டப்பட்டிருந்தது. இந்தப் படத்தினால் ஈர்க்கப்பட்டு மக்கள் பெருங்கூட்டமாக அவ்வாலயம் வந்தனர். பல புதுமைகளையும் பெற்றுச் சென்றனர். குறிப்பாக, 15ம் நூற்றாண்டில் ஒட்டமான் துருக்கியர்கள் அல்பேனியாவை ஆக்ரமிப்பதற்கு நெருங்கி வந்த சமயத்தில், இன்னும் சிறப்பாக, 1405ம் ஆண்டில் அல்பேனிய மாவீரர் Skanderbeg இறந்த பின்னர் இந்த Shkodra அன்னை மரியாவிடம் மக்கள் அதிகமாகச் செபித்தனர். Skanderbegம் இந்த அன்னைமரியிடம் செபித்து ஆலோசனை தேடி தனது படைக்குப் பலத்தையும் வேண்டினார். எனினும் துருக்கியர்கள் அல்பேனியாவைக் கைப்பற்றினர்.
Shkodraவை துருக்கியர்கள் ஆக்ரமித்ததால் Gjorgji, De Sclavis ஆகிய இரு அல்பேனியர்கள் அங்கிருந்து தப்பித்துச் செல்ல விரும்பினர். செல்லும் வழியில் Shkodra அன்னைமரியாவிடம் பாதுகாப்பான பயணத்துக்காக உருக்கமாகச் செபித்தனர். அவர்கள் செபித்துக்கொண்டிருந்தபோது அந்த அன்னைமரியா திருவுருவப் படம் மெதுவாக அச்சுவரிலிருந்து மறையத் தொடங்கியது. உடனே அவ்விருவரும் அப்படத்தைப் பின்தொடர்ந்தனர். அது ஒளிமிகுந்த விண்மீன் போன்று சென்றுகொண்டிருந்தது. கடல், மலை, பள்ளத்தாக்கு, இரவு பகல் என அப்படத்தை அவர்கள் பின்தொடர்ந்து சென்றனர். இறுதியில் அவர்கள் உரோம் வந்தடைந்தனர். உரோம் வந்ததும் அப்படம் அவ்விருவர் கண்களுக்கும் மறைந்து விட்டது. அதேநேரம் உரோமுக்குத் தெற்கே ஏறக்குறைய 48 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற Genazzano என்ற ஊரில் ஒரு புதுமையான அன்னைமரியா திருவுருவப்படம் தோன்றியதாக அவ்விரு அல்பேனியர்களும் கேள்விப்பட்டனர். அங்குச் சென்ற பார்த்தபோது அது Shkodraவிலிருந்த அன்னைமரியா திருவுருவப்படம் என்பதை உறுதி செய்தனர். இவ்விரு அல்பேனியர்களும் Genazzanoவிலே தங்கிவிட்டனர்.
கி.பி.432 முதல் 440 வரை பாப்பிறையாகப் பணியாற்றிய திருத்தந்தை 3ம் சிக்ஸ்துஸ், உரோம் புனித மேரி மேஜர் பசிலிக்காவைப் புதுப்பிப்பதற்குப் பல இடங்களிலிருந்து உதவிகள் கேட்டார். அதற்கு Genazzano நகர மக்கள் தாராளமாக உதவிகள் செய்தனர். அதற்கு நன்றியாக, Genazzano மக்களுக்கு ஓர் இடம் கொடுக்கப்பட்டது. அவ்விடத்தில் நல்லாலோசனை அன்னைமரியாவுக்கு ஆலயம் ஒன்றை அவர்கள் கட்டினர். 1356ம் ஆண்டில் அவ்வாலயம் புனித அகுஸ்தீன் சபையினரிடம் கொடுக்கப்பட்டது. நாளடைவில் அக்கோவில் பழுதடைந்தது. Petruccia de Geneo என்ற கைம்பெண் தனது சேமிப்பை வைத்து அதனைப் புதுப்பிக்க முன்வந்தார். தனது சேமிப்பு அனைத்தையும் செலவிட்டார். ஆனால் அப்பணத்தை வைத்து ஆலயம் முழுவதையும் அப்பெண்ணால் புதுப்பிக்க முடியவில்லை. 1467ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதியன்று அந்நகர மக்கள் அனைவரும் சேர்ந்து தங்கள் நகரின் பாதுகாவலரான புனித மாற்குவின் விழாவை வெகு ஆடம்பரமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அன்று மாலை 4 மணியிருக்கும். மக்களை ஆடல்பாடல்களால் மகிழ்ச்சிப்படுத்திக் கொண்டிருந்தவர்கள் மிக நேர்த்தியான இசையைக் கேட்டனர். பின்னர் அனைவரும் அமைதியாக அந்த இசை வந்த திசை நோக்கி வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு புதிரான மேகம் வானத்திலிருந்து இறங்கி வந்து அந்த ஆலயத்தில் முடிக்கப்படாத சுவரில் சென்றிறங்கியது. விழாவைச் சிறப்பித்துக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன்பாக அந்த மேகம் மறைந்தது. ஆனால் அவ்விடத்தில் அன்னைமரியாவையும் குழந்தை இயேசுவையும் கொண்ட ஓர் ஓவியம் தெரிந்தது. இந்த ஓவியம் முடிக்கப்படாத அந்த ஆலயச் சுவரில் இருந்தது. உடனடியாக ஆலய மணிகள் தானாகவே ஒலித்தன.
இந்நேரத்தில் ஆலயமணிகள் ஒலிப்பது கேட்டு அந்நகர மக்கள் அனைவரும் அவ்விடத்தில் கூடிவிட்டனர். மற்றோர் இடத்தில் செபம் செய்துகொண்டிருந்த Petruccia, ஆலயமணிகளின் சப்தத்தைக் கேட்டவுடன் அங்கு வந்து அற்புதமாக அவ்விடம் வந்து சேர்ந்த புதுமை அன்னைமரியா படத்தின் முன்னர் வீழ்ந்து பணிந்து கண்ணீர் சொறிந்தார். இப்புதுமைச் செய்தி இத்தாலி முழுவதும் பரவியது. எந்த மனிதரின் தலையீடும் இல்லாமல் மிக அழகான அந்த அன்னைமரியா திருவுருவப்படம் அந்தச் சுவரில் தோன்றியது அனைவருக்கும் அதிசயமாக இருந்தது. பலருக்குப் புதுமைகள் நடந்தன. முக்கியமான புதுமைகளைப் பதிவுசெய்வதற்கு ஒருவர் நியமிக்கப்பட்டார். 1467ம் ஆண்டு ஏப்ரல் 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதிவரை 171 புதுமைகள் நடந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விடத்தின் புகழ் பரவத் தொடங்கியது.
1630ம் ஆண்டில் திருத்தந்தை 8ம் உர்பானும், 1864ம் ஆண்டில் திருத்தந்தை 9ம் பத்திநாதரும் அவ்விடத்துக்குத் திருப்பயணம் மேற்கொண்டு அன்னைமரியாவின் பாதுகாவலை இறைஞ்சினர். 1682ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதியன்று திருத்தந்தை 11ம் இன்னோசென்ட் இப்படத்துக்கு வெகு ஆடம்பரமாக முடிசூட்டினார். இன்னும், புனிதர்கள் அலாய்சியஸ் கொன்சாகா, அல்போன்சுஸ் லிகோரி, ஜான்போஸ்கோ போன்றவர்களும் இங்கு சென்றுள்ளனர். 1753ம் ஆண்டில் திருத்தந்தை 14ம் பெனடிக்ட் நல்லாலோசனை பக்த சபையை ஆரம்பித்தார். 1893ம் ஆண்டில் திருத்தந்தை 13ம் சிங்கராயர் இத்தாயின் உத்தரியத்தை அணிகிறவர்களுக்குப் பரிபூரண பலனை அறிவித்தார். 1939ம் ஆண்டில் திருத்தந்தை 12ம் பத்திநாதர் தனது பாப்பிறைப் பதவிக்காலத்தை நல்லாலோசனை அன்னைமரியாவின் பாதுகாவலில் அர்ப்பணித்தார். இவ்வன்னைமரியா பக்தியை அகுஸ்தீன் சபையினர் பரப்பி வருகின்றனர். இயேசு சபையினரும் இப்பக்தியை பரப்பி வருகின்றனர்.
Genazzano நல்லாலோசனை அன்னை மரியாவின் திருவிழா ஆண்டுதோறும் ஏப்ரல் 26ம் தேதியன்று சிறப்பிக்கப்படுகின்றது. இன்றும் பலர் Genazzano நல்லாலோசனை அன்னை மரியாவின் ஆலயத்துக்குத் திருப்பயணமாகச் சென்று அன்னை மரியாவின் பாதுகாவலில் தங்களை அர்ப்பணித்து அத்தாயிடம் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகளைப் பெற்று வருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.