2013-04-30 15:34:19

விவிலியத் தேடல் – 'நல்ல சமாரியர்' உவமை: பகுதி 11


RealAudioMP3 ஒவ்வொரு நாளும் இந்தியாவில் ஆயிரத்திற்கும் அதிகமான சாலை விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளன. அதாவது, உலகின் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவு, நிமிடத்திற்கு ஒரு சாலை விபத்து இந்தியாவில் நிகழ்வதாக ஊடகங்கள் கூறுகின்றன. ஏப்ரல் 14, தமிழர் புத்தாண்டு நாளன்று, இந்தியாவில் நடைபெற்ற பல நூறு சாலை விபத்துக்களில் ஒன்று இந்தியாவின் ஜெய்பூர் நகரில் நிகழ்ந்தது. இது, இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகெங்கும் உள்ள ஊடகங்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது.
இளம் தம்பதியர், தங்கள் இரு குழந்தைகளுடன் இரு சக்கர வாகனம் ஒன்றில் சென்றபோது, லாரி ஒன்று அவர்கள் மீது மோதியதால், நால்வரும் சாலையில் வீழ்ந்தனர். தாயும் அவர் மடியில் இருந்த 8 மாதப் பெண் குழந்தையும் அதிக அடிபட்டு, இரத்தம் இழந்தபடி சாலையில் கிடந்தனர். அவர்களருகே அடிபட்டுக் கிடந்த தந்தை Kanhaiya Lal Raigar, அவ்வழியேச் சென்ற அனைத்து வாகனங்களையும் நிறுத்த முயன்று தோற்றுப்போனார். குறைந்தது 20 வாகனங்களாவது அடிபட்டுக் கிடந்தவர்களைக் கடந்து சென்றதாகச் சொல்லப்படுகிறது. 15 அல்லது 20 நிமிடங்கள் சென்றபின் உதவி வந்தது. இவ்வளவு தாமதமாக உதவி வந்ததால், தாயும், 8 மாதக் குழந்தையும் இறந்தனர். உதவிச்செய்ய வந்தவரை ஒரு சில நாளிதழ்கள் 'நல்ல சமாரியர்' என்று குறிப்பிட்டுள்ளன.
அதற்கு அடுத்தநாள், ஏப்ரல் 15ம் தேதி பாஸ்டன் நகரில் மாரத்தான் பந்தயத்தின் இறுதியில் இரு குண்டுகள் வெடித்தன. மூவர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். அந்த வன்முறையின் போதும், தங்கள் உயிரைப் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், குண்டு வெடித்த இடம் நோக்கி ஓடிச்சென்று உதவிகள் செய்தவர்களை 'நல்ல சமாரியர்' என்றே ஊடகங்கள் கூறின. 'நல்ல சமாரியர்' என்ற உவமை உலக மனசாட்சியில் ஆழமாய் பதிந்த ஓர் எண்ணம் என்பதற்கு இந்த நிகழ்வுகள் சான்றுகள்.

ஜெய்பூர் சாலையில் அடிபட்டுக் கிடந்த தாயையும், குழந்தையையும் கடந்து சென்ற வாகனங்களில் இருந்தவர்களை, கடின உள்ளத்தினர் என்று அனைத்து ஊடகங்களும் தீர்ப்பு வழங்கியுள்ளன. அவர்கள் மனிதர்கள்தானா என்ற போக்கில் கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மனிதர் என்றாலே, கருணை உள்ளம், தேவையில் இருப்போருக்கு உதவிகள் செய்யும் எண்ணம் ஆகியவை இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இக்கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன. கடந்து சென்ற வாகனங்களில் இருந்தவர்கள் நிலையில் என்னை இருத்திப் பார்க்கிறேன். எனக்குள்ளும் தயக்கங்கள், கேள்விகள் எழுவதை உணர்கிறேன். தேவையில் தவிப்பவரைக் கண்டும் அவர்கள் ஏன் கடந்து சென்றனர்? தேவையில் இருப்பவரைக் கண்டு நான் ஏன் பல நேரங்களில் விலகிச் சென்றுள்ளேன்? பல காரணங்களைக் கூறலாம். ஆனால், அடிப்படையில் இருப்பதாய் நான் உணரும் ஒரு காரணம்... அவர்களுக்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. இவர்கள் எனக்கு 'அடுத்திருப்பவர்' அல்ல என்பதே அடிப்படை காரணம்.

மனித சமுதாயத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்டவர்கள்தாம். மனித சமுதாயத்தின் ஏதோ ஒரு மூலையில், யாருக்கோ நடக்கும் ஒரு நிகழ்வு நம்மைப் பாதிக்காது என்று வாழ்வதில் ஆபத்து உண்டு. இதை வலியுறுத்தும் ஓர் உவமை இதோ:
ஒரு வீட்டில் ஏதொ ஒரு மூலையில், ஒரு பொந்துக்குள் வாழ்ந்தது ஒரு சுண்டெலி. அந்த எலியைப் பிடிக்க, வீட்டு உரிமையாளர் ஓர் எலிப்பொறியை சந்தையிலிருந்து வாங்கிவந்தார். இதைக் கண்ட எலி, அவ்வீட்டில் வளர்ந்துவந்த மற்ற உயிரினங்களிடம் விரைந்து சென்று, "வீட்டில் ஓர் எலிப்பொறி உள்ளது... எலிப்பொறி உள்ளது" என்று கத்தியது.
எலியின் கூச்சலைக் கேட்ட கோழி, "எலியே, ஏன் இப்படிக் கத்துகிறாய்? எலிப்பொறி என்பது உன்னுடைய பிரச்சனை. எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை" என்று சொன்னது.
எலி அங்கிருந்த செம்மறி ஆட்டிடம் முறையிட்டபோது, அது எலியிடம், "இதைக் கேட்டு வருத்தப்படுகிறேன். ஆனால், உனக்காக வேண்டிக் கொள்வதைவிட, என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியாது" என்று சொன்னது.
அடுத்ததாக, அவ்வீட்டில் வளர்க்கப்பட்ட பசுவிடம் எலி தன் குறையைச் சொல்லி அழுதது. "ஐயோ, எலிப்பொறியா? நானும் அதில் மாட்டிக் கொள்வேனோ? உடம்பெல்லாம் நடுங்குகிறதே!" என்று பசு பயந்ததுபோல் நடித்தது, ஏளனமாகச் சிரித்தது.
தன்னுடைய பிரச்னையை யாரும் புரிந்துகொள்ளவில்லை என்ற வருத்தத்துடன் எலி தன் மறைவிடம் சென்றது.

அன்றிரவு, எலிப்பொறியில் ஏதோ சிக்கிக்கொண்ட சப்தம் கேட்டது. எலி அகப்பட்டு விட்டதாக மகிழ்ந்து, வீட்டுத் தலைவி, அந்த இருட்டில் எலிப்பொறியை நெருங்கியபோது, வால் மட்டும் எலிப்பொறியில் சிக்கியபடி அங்கு கிடந்த ஒரு பாம்பு, வீட்டுத் தலைவியைக் கொத்தியது.
வீட்டுத் தலைவியை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று, உயிரைக் காப்பாற்றினர். ஆனால், அவருக்குக் காய்ச்சல் தொடர்ந்தது. காய்ச்சலுக்குச் சிறந்த மருந்து கோழி சூப் என்று யாரோ சொல்ல, வீட்டுத் தலைவர் தான் வளர்த்துவந்த கோழியை வெட்டி, சூப் செய்து கொடுத்தார் மனைவிக்கு.காய்ச்சல் தொடர்ந்ததால், உறவினர்கள் பலர் அந்த வீட்டில் வந்து தங்கினர். அவர்களுக்கு உணவு சமைக்க, செம்மறியாட்டை வெட்டி, உணவு பரிமாறினார் வீட்டுத் தலைவர்.
இன்னும் சில நாட்களில் வீட்டுத் தலைவி, இறந்தார். அவரது இறுதி அடக்கச் சடங்குக்கு வந்திருந்த ஊர் மக்களுக்கு விருந்து கொடுக்க, வீட்டிலிருந்த பசுவைக் கொன்றார் வீட்டுத் தலைவர்.
இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எலி, "வீட்டில் ஓர் எலிப்பொறி உள்ளதென்று நான் அப்போதே சொன்னேன். யாரும் கேட்கவில்லை" என்று தனக்குள் சொல்லி வருத்தப்பட்டது.
நகைச்சுவை கலந்து சொல்லப்பட்ட உவமை என்றாலும், நறுக்கென்று மனதில் தைக்கும் உண்மையைச் சொல்கிறது. யாருக்கோ, எங்கோ நிகழும் பிரச்சனைக்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று ஒதுங்கிச் செல்லும் நம்மை மீண்டும் சிந்திக்கத் தூண்டும் ஓர் உவமை இது.

மனித சமுதாயத்தை ஓர் உடலுக்கு ஒப்புமைப்படுத்தி பேசுவதும் இதே எண்ணத்தை வலியுறுத்தும் மற்றோர் உருவகம். நமது கால் விரலில் படும் அடி, உடல் முழுவதையும் பாதிப்பதில்லையா? காலில் படும் அடிக்கு, கண்கள் கண்ணீர் வடிப்பதில்லையா? "ஓ, அது கால்தானே!" என்ற எண்ணத்தில் நமது கைகள் அடிபட்ட இடத்தில் மருந்திட மறுக்கின்றனவா?
புனித பவுல் அடியார் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் 12ம் பிரிவில் கிறிஸ்தவ சமுதாயத்தை ஓர் உடலாக அவர் உருவகப்படுத்தி பேசியிருப்பதை நாம் மீண்டும் நினைவு படுத்திக் கொள்வது பயனளிக்கும்.
கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 12 : 12-27
உடல் ஒன்றே: உறுப்புகள் பல... யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல: பல உறுப்புகளால் ஆனது. நான் கை அல்ல: ஆகவே இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல எனக் கால் சொல்லுமானால், அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா? நான் கண் அல்ல: ஆகவே இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல எனக் காது சொல்லுமானால், அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா?... கண் கையைப்பார்த்து, நீ எனக்குத் தேவையில்லை என்றோ தலை கால்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தேவையில்லை என்றோ சொல்ல முடியாது. மாறாக, உடலில் மிக வலுவற்றனவாய்த் தோன்றும் உறுப்புகளே மிகவும் தேவையானவையாய் இருக்கின்றன. உடலின் மதிப்புக் குறைவான உறுப்புகள் என நமக்குத் தோன்றுபவற்றிற்கே நாம் மிகுந்த மதிப்புக் கொடுக்கிறோம்.... ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும். ஓர் உறுப்பு பெருமை பெற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து மகிழ்ச்சியுறும். நீங்கள் கிறிஸ்துவின் உடல்: ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்.
உலகச் சமுதாயம் என்ற உடலின் ஏதாவது ஒரு பகுதியில் நிகழும் ஒரு பிரச்சனை, ஏதொ ஒரு வகையில் நம் அனைவரையும் பாதிக்கின்றது. உடலின் ஒரு பகுதியில் உண்டாகும் வலியை உடல் உணர முடியவில்லை என்றால், உடல் முழுவதுமே நலமின்றி உள்ளது என்பதே பொருள். இன்றைய உலகச் சமுதாயம் இதுபோல நலமற்று இருப்பதை ஒவ்வொரு நாளும் நாம் உணர்ந்து வருகிறோம்.

பல மதங்களையும், பல பண்பாடுகளையும், பல மொழிகளையும் உள்ளடக்கிய இந்திய சமுதாயத்தின் கூடுதல் சுமையாக நம்மை அழுத்தி வருவது... நம்மிடையே உள்ள சாதிகள். இந்தப் பிரிவுகள் போதாதென்று, இன்னும் நம்மைப் பிரிக்க, அரசியல் கட்சிகள், இரசிகர் மன்றங்கள், கிரிக்கெட் இரசிகர் கூட்டங்கள் என்று செயற்கையான எத்தனை பிரிவுகள்? இப்பிரிவுகளால், அடுத்திருப்பவர் யார் என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு வழி இல்லாமல் திகைக்கிறோம். தேவையில் உள்ளவர்களைக் கண்டும், உதவிகள் செய்வதற்கு இத்தகைய பிரிவுகள் நம்மைத் தடுக்கின்றன. பிரிவுகள் இந்தியாவில் மட்டும் காணப்படும் நோய் என்று எண்ண வேண்டாம். பிரிவுகளும், அதன் விளைவுகளும் மனித வரலாற்றில், எல்லா நாடுகளிலும் பல வகைகளில் காணப்படுகின்றன.

இரண்டாம் உலகப் போரின்போது பலவகை செயற்கையான பிரிவுகளால் சிதறுண்டு இருந்தது ஐரோப்பிய சமுதாயம். இந்தப் பிரிவுகளை வளர்த்த ஹிட்லர் போன்ற தலைவர்கள் தங்கள் சுயநல வேட்டைக்கு மக்கள் மத்தியில் இப்பிரிவுகளை வளர்த்துவிட்டனர். இரண்டாம் உலகப் போரின்போது, நாத்சி வதை முகாமில் கொடிய சித்திரவதைகளை அனுபவித்த Friedrich Martin Niemöller என்ற மறைபோதகர் எழுதிய வரிகள் நமக்கு ஓர் ஆன்ம ஆய்வாக அமைகின்றன:
"முதலில் அவர்கள் கம்யூனிசவாதிகளைத் தேடி வந்தார்கள். நான் அதை எதிர்க்கவில்லை, ஏனெனில், நான் ஒரு கம்யூனிசவாதி அல்ல. பிறகு அவர்கள் யூதர்களைத் தேடி வந்தனர். நான் அப்போதும் எதிர்க்கவில்லை; ஏனெனில், நான் யூதனல்ல. பிறகு அவர்கள் கத்தோலிக்கர்களைத் தேடி வந்தனர். அப்போதும் நான் எதிர்த்து நிற்கவில்லை; ஏனெனில், நான் வேறு மதத்தவன். இறுதியில், அவர்கள் என்னைத் தேடி வந்தனர்; அப்போது, எனக்காக வாதாட எவரும் இல்லை."








All the contents on this site are copyrighted ©.