2013-04-30 16:04:22

திருத்தந்தை பிரான்சிஸ், இஸ்ரேல் அரசுத்தலைவர் Peres சந்திப்பு


ஏப்.30,2013. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் மீண்டும் விரைவில் தொடங்கப்படுமாறும், இவ்விரு தரப்பினரின் நியாயமான ஆசைகள் நிறைவேற்றப்படும் துணிச்சலான தீர்மானங்கள் அனைத்துலக சமுதாயத்தின் ஆதரவுடன் எடுக்கப்படுமாறும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஸ்ரேல் அரசுத்தலைவர் Shimon Peres அவர்களை இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி ஏற்படவும் அழைப்பு விடுத்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை முப்பது நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசிய பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் Peres.
மத்திய கிழக்குப் பகுதியில் அமைதிக்கும் உறுதியான தன்மைக்கும் வழிஅமைக்கும் விவகாரங்கள், எருசலேம் புனித நகரின் முக்கியத்துவம், சிரியாவின் நிலைமை, திருப்பீடத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயுள்ள உறவு, இஸ்ரேலுக்கும் உள்ளூர் கத்தோலிக்கச் சமூகங்களுக்கும் இடையேயுள்ள உறவு போன்ற விவகாரங்கள் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.