2013-04-30 16:14:56

சிறார் தொழில்முறைக்கு எதிரானப் போராட்டத்தில் சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள் முக்கிய காரணி, ஐ.நா.


ஏப்.30,2013. சிறார் தொழிலாளர்களைக் கொத்தடிமைத்தனத்திலிருந்து காப்பாற்றுவதில், சமூகப்பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்துவது முக்கிய பங்காற்ற முடியும் என்று ILO என்ற அனைத்துலக தொழில் நிறுவனம் கூறியது.
மே தினத்தையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள ILO நிறுவனம், பணம் மாற்றுத் திட்டங்கள், சமூகநலவாழ்வுப் பாதுகாப்பு, முதியோர் ஓய்வூதியம் போன்ற திட்டங்கள் உலகில் சிறார் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவதற்கு உதவும் என்று கூறியுள்ளது.
போஸ்ட்வானா, மலாவி, நமிபியா, தென்னாப்ரிக்கா, டான்சானியா, ஜிம்பாபுவே போன்ற ஆப்ரிக்க நாடுகளில் 50 முதல் 60 விழுக்காட்டு அநாதைச் சிறார் தங்களது தாத்தா பாட்டிகளோடு வாழ்கின்றனர், ஆதலால் வயதான காலத்தில் வருமானத்துக்குப் பாதுகாப்பு வழங்குவது இன்றியமையாதது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
உலகில் 500 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு, அதாவது உலகின் ஏறக்குறைய 75 விழுக்காட்டு மக்களுக்குப் போதுமான சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள் கிடையாது என்றும் ILO கூறியது.
11 கோடியே 50 இலட்சம் கொத்தடிமைச் சிறார் தொழிலாளர் உட்பட உலகில் சிறார் தொழிலாளர்கள் பெருமளவில் இருப்பதற்கு இந்நிலையே காரணம் என்றும் அனைத்துலக தொழில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.