2013-04-30 16:16:10

உலக அளவில் நாட்டுக்குள்ளே புலம்பெயர்வு அதிகரிப்பு


ஏப்.30,2013. தற்போது உலகிலுள்ள ஏறக்குறைய 3 கோடி அகதிகளுள் 65 இலட்சம் பேர் 2012ம் ஆண்டில் புதிதாகப் புலம் பெயர்ந்தவர்கள் என்று ஜெனீவாவிலுள்ள IDMC என்ற நாட்டுக்குள்ளே இடம்பெறும் புலம்பெயர்வைக் கண்காணிக்கும் மையம் கூறியது.
கடந்த ஆண்டில் புதிதாகப் புலம் பெயர்ந்தவர்களில் பாதிப்பேர், சிரியாவிலும், காங்கோ சனநாயகக் குடியரசிலும் இடம்பெறும் வன்முறையினால் புலம் பெயர்ந்தவர்கள் என்றும் IDMC மையம் இத்திங்களன்று வெளியிட்ட அறிக்கை கூறியது.
2012ம் ஆண்டில் நாட்டுக்குள்ளேயே புலம் பெயர்ந்த மக்களை அதிகமாகக் கொண்டிருந்த நாடு கொலம்பியா என்றும், இதற்கு அந்நாட்டில் அரசுக்கும் புரட்சிக்குழுக்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் சண்டையே காரணம் என்றும், கொலம்பியாவில் 49 இலட்சம் முதல் 55 இலட்சம் புலம்பெயர்ந்த மக்கள் இருக்கிறார்கள் என்றும் அவ்வறிக்கை கூறியது.
உலகில் நாட்டுக்குள்ளேயே புலம் பெயர்ந்த மக்களை அதிகமாகக் கொண்டிருக்கும் நாடுகளில் கொலம்பியாவுக்கு அடுத்தபடியாக சிரியாவும், அதற்கு அடுத்த இடத்தில் காங்கோ ஜனநாயகக் குடியரசும் உள்ளன என்று IDMC மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
சிரியாவில்மட்டுமே கடந்த ஆண்டின் இறுதியில், 24 இலட்சம் பேர் நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்திருந்தனர் என்று இம்மையம் கூறுகிறது.

ஆதாரம் : Guardian







All the contents on this site are copyrighted ©.