2013-04-29 17:01:55

மன்னார் ஆயருடன் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு


ஏப்.29,2013. மகிந்த ராஜபக்ச அரசால் நாட்டில் தமிழர் பிரச்சனை உட்பட எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வைக் காணமுடியாது என, மன்னாருக்கு இஞ்ஞாயிறன்று சென்று ஆயர் இராயப்பு ஜோசப்பைச் சந்தித்த இலங்கை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று, அங்கு மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், மன்னார் மறை மாவட்ட குருகுல முதல்வர் ஆன்டனி விக்டர், காணாமல்போன உறவுகளைத் தேடும் குடும்பங்களின் அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியபின், உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அதிபர் மகிந்த ராஜபக்ச அரசின் காலத்தில்தான் அதிகமான தமிழ் மக்கள் காணாமல் போயுள்ளனர், ஆனால், அரசோ காணாமல் போனவர்கள் என்று எவரும் இல்லை எனப் பொய்களைக் கூறி நாட்டையும், உலகையும் ஏமாற்ற முனைகிறது எனக் குற்றஞ்சாட்டினார்.
ஆயருடன் இடம்பெற்ற சந்திப்பில் பலதரப்பட்ட விடயங்கள் ஆராயப்பட்ட நிலையில், மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் காணாமல்போன சுமார் 472 பேருடைய விவரங்களைக் காணாமல்போன உறவுகளைத் தேடும் குடும்பங்களின் அமைப்பு, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தது.

ஆதாரம் : TamilWin








All the contents on this site are copyrighted ©.