2013-04-29 17:00:45

திருத்தந்தை : தூய ஆவி, நம்மையும், நம் வழியாக இவ்வுலகையும் புதுப்பிக்க விரும்புகிறார்


ஏப்.29,2013. உலகம் தரும் புதியவை, வந்து போகும், ஆனால் தூய ஆவி கொணர்வதோ என்றும் நிலைத்திருக்கக்கூடியது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தியா, இலங்கை, லெபனன், பெலாருஸ், டோங்கா, கோங்கோ, சீனா, பிலீப்பீன்ஸ் என பல நாடுகளிலிருந்து வந்திருந்த 44 இளையோருக்கு, புனித பேதுரு வளாகத்தில் உறுதிப்பூசுதல் என்ற திருவருட்சாதனத்தை வழங்கிய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, தூய ஆவி நம்மை புதுப்பிப்பதுடன் நம் வழியாக இவ்வுலகையும் புதுப்பிக்க விரும்புகிறார் என்றார்.
நம் இதயக் கதவுகளை இறைவனுக்குத் திறந்து, அவரால் நாம் வழிநடத்தப்பட அனுமதிப்போம் என்று கூறியத் திருத்தந்தை, கடவுள் நமக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கி நம்மை புதுப்படைப்புகளாக மாற்றுவார் என்றார்.
ஒவ்வொரு நாள் மாலையும் நாம் சிறிதுநேரம் அமர்ந்து, இன்று நான் என் நண்பர்களுக்கு, என் பெற்றோருக்கு, ஏதாவது ஒரு முதியவருக்கு, என்ன பிறரன்புச் செயலை ஆற்றினேன் என சிந்திப்பது எத்தனை சிறப்பாக இருக்கும் எனவும் அவ்வாளகத்தில் கூடியிருந்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட திருப்பயணிகளிடம் கூறினார் திருத்தந்தை.
நீரோட்டத்தை எதிர்த்து நீந்துவதற்கான பலத்தை இறைவன் நமக்கு வழங்குகிறார், ஆகவே எதைக்குறித்தும் அச்சம் கொள்ளவேண்டாம் எனவும் கூறிய திருத்தந்தை, சிறிய விடயங்களுக்காக கிறிஸ்தவர்கள் தேர்வுச்செய்யப்படவில்லை, ஆகவே பெரிய கொள்கைகளைக் கட்டியெழுப்பி அதற்காகவே வாழக்கற்றுக்கொள்ளுங்கள் எனவும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.