2013-04-29 17:00:18

திருத்தந்தை - நம்மை அடித்துத் துவைக்கக் காத்திருக்கும் துப்புரவுத் தொழிலாளி அல்ல இயேசு


ஏப்.29,2013. ஒப்புரவு அருள்சாதனம் பெறும் இடம், நம் பாவங்கள் தானாகவே சுத்தம் செய்யப்படும் ஓர் உலர் சலவையகம் அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இத்திங்கள் காலை புனித மார்த்தா இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில், திருப்பீட மேலாளர்கள் பணியில் ஈடுபட்டிருப்பவருக்குத் திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மன்னிப்பதற்குக் காத்திருக்கும் இறைவனை மையப்படுத்தி தன் மறையுரையை வழங்கினார்.
புனித யோவான் எழுதிய முதல் திருமுகத்தில் காணப்படும் "கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை" என்ற வார்த்தைகளை மையமாகக் கொண்டு மறையுரை வழங்கியத் திருத்தந்தை, நம் அனைவரின் வாழ்விலும் இருள் உள்ளது எனினும், நாமும் ஒளியில் வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்று எடுத்துரைத்தார்.
நம்மில் இருக்கும் இருளையும், நாம் ஒளிக்குச் செல்லவேண்டும் என்ற தேவையையும் உணராமல் வாழ்வோர் சந்திக்கும் ஆபத்துகளையும் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒப்புரவு அருட்சாதனத்தில் நம்மை அடித்துத் துவைக்கக் காத்திருக்கும் துப்புரவுத் தொழிலாளி அல்ல, இயேசு என்பதைக் கூறியத் திருத்தந்தை, இவ்வருட் சாதனத்தின் வழியாக நம்மை எப்போதும் மன்னிக்கக் காத்திருக்கும் இயேசுவை நாம் திரும்பத் திரும்ப அணுகிச் செல்ல தயங்கக்கூடாது என்பதையும் தன் மறையுரையில் வலியுறுத்தினார்.
இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட Twitter செய்தியில், "இன்று நான் பிறருக்கு ஓர் உதவி செய்துள்ளேன் என்று ஒவ்வொரு நாள் முடிவிலும் நாம் ஒவ்வொருவரும் சொல்ல முடிந்தால், எவ்வளவு அற்புதமாக இருக்கும்!" என்று கூறியுள்ளார். ஆங்கிலம், இத்தாலியம், பிரெஞ்ச், ஸ்பானியம், அரேபியம் உட்பட 9 மொழிகளில் @Pontifex எனப்படும் Twitter பக்கத்தில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.