2013-04-27 16:45:48

திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்துவை மகிழ்ச்சியோடு அறிவியுங்கள்


ஏப்.27,2013. நற்செய்திப்பணி புரியவும், தனது பெயரை அறிவிக்கவும் நம்மை அழைக்கும் இயேசுவை மகிழ்ச்சியோடு நோக்குமாறும், நமக்குள்ளே முடங்கிக் கிடப்பதைத் தவிர்க்குமாறும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார்.
இச்சனிக்கிழமை காலை புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் நற்செய்தி அறிவிப்புப்பணியை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
கிறிஸ்துவின் சீடர்கள் சமூகம் கூடியிருந்த அந்தியோக்கியாவில் பலர் நம் ஆண்டவரின் வார்த்தைகளைக் கேட்பதற்கு மறுத்து, தங்களையே ஏன் தாழிட்டுக்கொண்டார்கள் என்ற கேள்வியை எழுப்பிய திருத்தந்தை, ஏனெனில் அவர்கள் மூடிய இதயங்களைக் கொண்டிருந்தனர், தூயஆவியின் புதிய வாழ்வுக்குத் தங்களைக் கையளிக்காமல் இருந்தனர் என்று விளக்கினார்.
எல்லாமே தாங்கள் நினைத்தபடியே இருக்க வேண்டும் என்றும், தங்களை விசுவாசத்தின் காவலர்கள் என்றும் அவர்கள் கருதியதால் கிறிஸ்துவின் சீடர்களுக்கு எதிராகப் பேசத் தொடங்கினார்கள் என்றுரைத்த திருத்தந்தை, இக்குழுக்களின் இந்தப் போக்கை, வரலாற்றில் தங்களையே தாழிட்டுக்கொண்டிருக்கும் குழுக்களோடு ஒப்பிடலாம் என்றும் கூறினார்.
இக்குழுக்கள் ஆண்டவருக்குத் தங்களையேத் திறக்கும் சுதந்திரத்தைக் கொண்டிருக்கவில்லை எனவும், இக்குழுக்கள் வீண்பேச்சும் அவதூறும் பேசுபவர்கள், இக்குழுக்களில் உள்ளவர்கள் தங்களையே பார்க்கின்றனர், இறுதியில் இந்நிலை ஒருவர் ஒருவரை அழித்துக்கொள்வதில் முடிகின்றது எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
நற்செய்தி அறிவிக்க இயேசு நம்மை எவ்வாறு அனுப்புகிறார் என்று நோக்குமாறு வலியுறுத்திய திருத்தந்தை, இயேசு தமது பெயரை நாம் மகிழ்ச்சியோடு அறிவிக்க வேண்டுமென விரும்புகிறார், எனவே தூய ஆவியின் மகிழ்ச்சிக்கு நாம் பயப்படக் கூடாது என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.