2013-04-26 15:45:22

சிரியா குறித்த பிரிட்டன் கத்தோலிக்க, ஆங்லிக்கன் தலைவர்களின் அறிக்கை


ஏப்.26,2013. சிரியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் கடும் வன்முறைகளுக்கு அரசியல்ரீதியாகத் தீர்வு காணப்படுமாறும், அனைத்து சிரியா மக்களும் தங்களின் அடிப்படை உரிமைகளைப் பெறும்படியாகவும் தாங்கள் தொடர்ந்து செபிப்பதாக, பிரிட்டனின் கத்தோலிக்க மற்றும் ஆங்லிக்கன் கிறிஸ்தவத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
சிரியாவில் இவ்வாரத்தில் இரு ஆயர்கள் கடத்தப்பட்டிருப்பது குறித்தும், அந்நாட்டில் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடர்ந்து இடம்பெற்றுவரும் கடும் வன்முறைகள் குறித்தும் பிரிட்டனின் Westminster கத்தோலிக்கப் பேராயர் Vincent Nichols, Canterburyன் ஆங்லிக்கன் பேராயர் Justin Welby ஆகிய இருவரும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
சிரியாவின் கிறிஸ்தவச் சமூகங்களுக்குத் தங்களது உறுதியான ஆதரவையும் செபத்தையும் தெரிவித்துள்ள அத்தலைவர்கள், அந்நாட்டில் துன்புறும் மக்களுக்கான உடனடி மனிதாபிமான உதவிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிரியாவில் பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவந்த சமய சகிப்புத்தன்மை மீண்டும் காக்கப்படும்படியாகவும் அத்தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆதாரம் : CCN







All the contents on this site are copyrighted ©.