2013-04-24 16:37:00

பேராயர் சுள்ளிக்காட் : ஏழ்மை ஒழிப்பு மனித மாண்பின் சூழலில் புரிந்துகொள்ளப்பட வேண்டும்


ஏப்.24,2013. ஏழ்மை ஒழிப்பு, மனித மாண்பின் சூழலில் புரிந்துகொள்ளப்பட வேண்டும் மற்றும் இது இயற்கைச் சட்டத்தின்படி வழிநடத்தப்பட வேண்டும் என்று பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட் கூறினார்.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் ஏழ்மை ஒழிப்பு குறித்து இடம்பெற்ற கருத்துப் பகிர்வில் இவ்வாறு கூறிய, ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சுள்ளிக்காட், ஏழ்மை ஒழிப்பு குறித்து எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளிலும் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சி மையப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.
தாங்கள் வாழும் சமூகங்களின் பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் கலாச்சார வாழ்வில் பங்குகொள்வதிலிருந்து மக்கள் ஒதுக்கப்படுவதால் வறுமைநிலை ஏற்படுகின்றது என்றும், ஏழைகளை ஒதுக்குவது மனிதக்குடும்பத்தின் வாழ்வில் அவர்கள் தங்களது அடிப்படை உரிமைகளைப் பகிர்ந்து கொள்வதை மறுப்பதாகும் என்றும் கூறினார் பேராயர் சுள்ளிக்காட்.
இன்று உலகில் வறுமைக்கோட்டுக்குக்கீழ் வாழும் 129 கோடிப் பேரில் ஏறக்குறைய 40 கோடிப் பேர் இந்தியாவில் வாழ்கின்றனர் என்று உலக வங்கி கணக்கிட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.