2013-04-24 16:59:48

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


ஏப்ரல் 24, 2013. புதிய திருத்தந்தை பதவியேற்ற கடந்த 35 நாட்களில் அவர் நிறைவேற்றும் திருப்பலிகள் மற்றும் பொதுமறைபோதகங்களில் கலந்துகொள்ளும் விசுவாசிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம் இடம்பெறும் நாட்களில் தூய பேதுரு வளாகத்தின் முன்பகுதியிலுள்ள சாலை, போக்குவரத்திற்கு அடைக்கப்படும் அளவிற்கு கூட்டம் நிரம்பி வழிகிறது. அதிலும் இவ்வாரக் கூட்டம் வழக்கத்தைவிட சிறிது அதிகமாகவே இருந்தது எனலாம். இச்செவ்வாயன்று தன் நாமத்திருவிழாவை, அதாவது புனித ஜார்ஜ் விழாவை திருத்தந்தை சிறப்பித்ததையொட்டி அவருக்கு வாழ்த்துச்சொல்ல வந்த கூட்டமும் காரணமாக இருக்கலாம்.
கத்தோலிக்கர்களின் விசுவாச அறிக்கை குறித்து தன் மறைபோதகங்களை வழங்கிவரும் திருத்தந்தை, இவ்வாரம் 'வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க மகிமையில் மீண்டும் வருவார்' என்ற விசுவாச அறிக்கையின் வரிகள் குறித்து விளக்கமளித்தார்.
RealAudioMP3 அன்பு சகோதர சகோதரிகளே,
நம் விசுவாச அறிக்கை குறித்த மறைபோதகத்தின் தொடர்ச்சியாக இன்று கிறிஸ்துவின் இரண்டாம் வருகை குறித்துப் பேசும் 'வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு வழங்க மகிமையில் மீண்டும் வருவார்' என்ற விசுவாச அறிக்கையின் வரிகள் குறித்து காண்போம் என தன் மறைபோதகத்தைத் துவக்கினார் பாப்பிறை பிரான்சிஸ்.
இறைவனின் சாயலில் ஆணும் பெண்ணும் உருவாக்கப்பட்டதிலிருந்து மனிதகுல வரலாறு துவங்கியதுபோல், இயேசுவின் மறுவருகை மற்றும் இறுதித் தீர்ப்போடு அது நிறைவுபெறும் என்ற திருத்தந்தை, இன்றையக் காலத்தில் இறைவன் மற்றும் ஒருவர் ஒருவருக்கு நாம் வழங்கவேண்டிய கடமைகள் குறித்து புரிந்துகொள்ள இயேசுவின் உவமைகள் நமக்கு உதவுகின்றன என மறைபோதகத்தைத் தொடர்ந்தார்.
இறைவன் நம்மிடம் வரும்போது அவரை வரவேற்க நாம் ஆன்மீக முறையில் தயாராக இருக்க வேண்டும் என்பதை விவேகமுடைய மற்றும் விவேகமற்ற கன்னியர் குறித்த உவமை நமக்கு நினைவுறுத்துகின்றது. மிகுந்த பலன் தருமாறு கடவுளின் கொடைகளை விவேகமுடன் பயன்படுத்தவேண்டிய நம் பொறுப்புணர்வுகளை வலியுறுத்தி நிற்கிறது இயேசுவின் தாலந்து குறித்த உவமை. ஒவ்வொருவரும் கடவுள் தங்களுக்கு வழங்கிய கொடைகளை, தாலந்துகளை தாராளமனதுடன் மற்றவர்களின் நலனுக்காகவும், திருஅவை மற்றும் உலகின் நலனுக்காகவும் பயன்படுத்துமாறு இங்கு வந்திருக்கும் எண்ணற்ற இளைஞர்களை நோக்கி அழைப்பு விடுக்கிறேன். இறுதியாக, நாம் பிறர்மீது கொண்டிருக்கும் அன்பு, குறிப்பாக, உதவி தேவைப்படுபவர்கள் மீது நாம் காட்டும் அன்பின் மூலமாக நாம் தீர்ப்பிடப்படுவோம் என்பதை கடைசி தீர்ப்பு குறித்த உவமை நினைவுறுத்தி நிற்கின்றது. இறைவன் வரும்போது அவர் நம்மை நல்ல, விசுவாசமுள்ள பணியாளர்களாகக் கண்டுகொள்ள, நாம் பிறரன்பின் பணிகளிலும் செபத்திலும் விசுவாசமுள்ளவர்களாக இருந்து, இறைஇருப்பின் அடையாளங்களைக் கவனமாக உற்றுநோக்கி அச்சத்துடன், அதேவேளை முழுநம்பிக்கையுடன் இறைவனின் மறுவருகைக்காக்க் காத்திருக்கவேண்டும் என இந்த உவமைகள் மூலம் இயேசு நமக்குக் கற்பிக்கின்றார்.
RealAudioMP3 இவ்வாறு தன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, சிரியாவின் வடக்கில் இத்திங்களன்று கடத்தப்பட்டுள்ள அந்நாட்டு ஆர்த்தடாக்ஸ் ஆயர் Yohanna Ibrahim, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பேராயர் Boulos al-Yaziji ஆகிய இருவரின் விடுதலைக்காக செபிக்குமாறு அழைப்பு விடுத்தார். வன்முறைகளும் ஆயுத மோதல்களும் மரணத்தையும் துன்பங்களையும் விதைத்துக்கொண்டிருப்பது குறித்தும் கவலையை வெளியிட்ட பாப்பிறை, இரத்தம்சிந்தல்கள் நிறுத்தப்படுமாறும், சண்டையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்குமாறும், இப்பிரச்சனைகளுக்கு விரைவில் அரசியல் தீர்வு காணப்படுமாறும் இறைவனை நோக்கி வேண்டுவதாகவும் தெரிவித்தார். மறைபோதகத்தின் இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
RealAudioMP3
இப்புதனன்று தன் டுவிட்டர் பக்கத்தில் 'நாம் நம் விசுவாசத் தணலை செபம் மற்றும் அருளடயாளங்கள் மூலம் உயிர்துடிப்புடையதாக வைத்திருப்போம்: இறைவனை நாம் மறக்கமாட்டோம் என்பதில் உறுதியாயிருப்போம்' என்ற செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ்.








All the contents on this site are copyrighted ©.