2013-04-24 16:26:50

திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவை அதிகார மனப்பான்மை கொண்ட நிறுவனம் அல்ல, ஆனால் அது அன்பின் வரலாற்றைக் கொண்டது


ஏப்.24,2013. திருஅவை அதிகார மனப்பான்மை கொண்ட நிறுவனம் அல்ல, ஆனால் அது அன்பின் வரலாற்றைக் கொண்டது, திருஅவை அலுவலகங்களை உருவாக்கினால் அது அதிகார மனப்பான்மை கொண்டது போலாகிவிடும், தனது முக்கிய கூறையே இழந்துவிடும், அது அரசு-சாரா நிறுவனமாக மாறிவிடும் ஆபத்தை எதிர்நோக்கும், ஆனால் திருஅவை அரசு-சாரா நிறுவனம் அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
இப்புதன் திருப்பலி வாசகங்களை மையமாக வைத்து, இப்புதன் காலையில் நிகழ்த்திய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, இயேசு தனது திருஅவைக்கு விரும்பிய திருஅவையின் பாதை இன்னல்களும், சிலுவையும், அடக்குமுறைகளும் நிரம்பிய பாதை என்று கூறினார்.
இயேசுவின் சீடர்கள் அவரால் அனுப்பப்பட்ட தூதர்களாக மட்டுமே இருந்தார்கள் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், திருஅவை இராணுவத்தின் வழியாக வளர்வதில்லை, ஆனால் தூய ஆவியின் வல்லமையால் வளர்கிறது, ஏனெனில் திருஅவை நிறுவனம் அல்ல, அது ஒரு தாய், நாம் அனைவரும் நமது தாயாகிய திருஅவையில் குடும்பமாக இருக்கின்றோம் என்றும் கூறினார்.
புனித மார்த்தா இல்லத்தில் இப்புதன் காலையில் திருத்தந்தை நிகழ்த்திய திருப்பலியில் வத்திக்கான் வங்கிப் பணியாளர்கள் உட்பட சிலர் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.