2013-04-24 16:41:03

சிரியாவில் கடத்தப்பட்டுள்ள இரண்டு ஆயர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுமாறு அந்தியோக்கிய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர்கள் வேண்டுகோள்


ஏப்.24,2013. சிரியாவில் இத்திங்களன்று கடத்தப்பட்டுள்ள இரண்டு ஆர்த்தடாக்ஸ் ஆயர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுமாறு அந்தியோக்கியாவின் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அந்தியோக்கியா மற்றும் அனைத்து கிழக்குப் பகுதியின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவரும், அந்தியோக்கியா மற்றும் அனைத்து கிழக்குப் பகுதியின் ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவரும் சேர்ந்து இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களது சகோதரர்களான அலெப்போ கிரேக்க ஆர்த்தடாக்ஸ் ஆயர் Boulos al-Yazijம், அலெப்போ ஆர்த்தடாக்ஸ் ஆயர் Yohanna Ibrahimம் மனிதாபிமானப் பணிகளை முடித்துவிட்டுத் திரும்பும் வழியில் கடத்தப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தோம் எனத் தெரிவித்துள்ளனர்.
அப்பாவி பொதுமக்கள் உட்பட இப்படிப் பலரும் கடத்தப்படுவது குறித்து தாங்கள் மிகுந்த வருத்தமடைந்துள்ளதாகக் கூறியுள்ள ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர்கள், உள்ளூர் மற்றும் பன்னாட்டுச் சமூகத்துக்கு ஓர் அறிவிப்பையும் முன்வைத்துள்ளனர்.
விற்கவும், வாங்கவும், இன்னும், போரிலும் பயன்படுத்தப்படும் பொருளாகவும், அரசியல் அல்லது பணப்பொருளாகப் பரிமாற்றம் செய்யப்படும் பொருளாகவும் மனிதர் நோக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கு அனைத்து இசுலாமியப் பிரிவின் சகோதரர்கள் ஒன்றிணைந்து உழைக்குமாறு இத்தருணத்தில் கேட்பதாக முதுபெரும் தலைவர்கள் அவ்வறிக்கையில் கூறியுள்ளனர்.
கடத்தப்பட்டிருப்பவர்கள் உலகில் அமைதியின் தூதுவர்கள் என்பதைக் கடத்தியிருப்பவர்களுக்குத் தாங்கள் கூறுவதாகத் தெரிவித்துள்ள அத்தலைவர்கள், அவ்விரு ஆயர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கேட்டுள்ளனர்.
இதற்கிடையே, இவ்விரு ஆயர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று இச்செவ்வாயன்று வெளியான செய்தி தவறானது என்று அலெப்போ கிரேக்க மெல்கித்தே வழிபாட்டுமுறையின் பேராயர் Jean-Clement Jeanbart ஆசியச் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.