2013-04-24 16:47:41

ஏப்ரல் 25, 2013. கற்றனைத்தூறும்...... மாம்பழம்


இராஜகனியான மாம்பழம் முக்கனிகளில் முதல் கனியாகும். மாம்பழத்தின் பூர்வீகம் தென்னிந்தியாவாகும். மாம்பழம் பொதுவாக கோடை காலத்தில் அதிகம் விளையும். இந்தியாவில், மாம்பழங்கள் ஏறத்தாழ கி.மு 4000 ஆண்டிலேயே பயனில் இருந்தன. 1800 களில் ஆங்கிலேயர்கள் மாம்பழத்தை ஐரோப்பாவிற்கு அறிமுகம் செய்தனர். அதற்கு முன், ஃபிரெஞ்ச் மற்றும் போர்த்துக்கீசிய வியாபாரிகள் மாம்பழத்தை பிலிப்பீன்ஸ், மெக்சிகோ, ஆப்ரிக்க கண்டம் ஆகியவைகளில் அறிமுகம் செய்தனர். மாமரங்கள் ஆசியா, அமெரிக்கா, தென் மற்றும் மத்திய ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியகண்டங்களில் பூமத்தியரேகைப் பகுதிகளிலும், பிற உறைபனியற்ற பகுதிகளிலும் வளர்க்கப்படுகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரகங்கள் வெவ்வேறு குணங்களுடன் கிடைக்கின்றன. உலக உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் வழங்கியுள்ள புள்ளிவிவரத்தின்படி, 2001ம் ஆண்டில் உலகில் 2 கோடியே 30 இலட்சம் டன் மாம்பழம் விளைவிக்கப்பட்டது. இதில் இந்தியாவில் விளைந்த அளவு 1 கோடியே 20 இலட்சம் டன். இது உலக விளைச்சலில் பாதிக்கு மேலாகும். சீனாவில் 30 இலட்சம் டன்னும், பாகிஸ்தானில் 22.5 இலட்சம் டன்னும், மெக்சிக்கோவில் 15 இலட்சம் டன்னும் தாய்லாந்தில் 13.5 இலட்சம் டன்னும் விளைவிக்கப்படுகின்றன. முன்னணி 10 நாடுகளின் மொத்த விளைச்சல் உலக விளைச்சலில் 80 விழுக்காடு ஆகும்.
மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது இரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது. மேலும், மாம்பழத்தில் இரும்புச்சத்து மிக அதிகமாக அடங்கியுள்ளது. குறிப்பிட்ட சில வகை மாம்பழங்களைத் தோலுடன் சாப்பிட்டால், உடல் எடை குறையும் வாய்ப்பு உள்ளதாக ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் பல்கலைக்கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
100 கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளன. மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கியத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாகச் சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளன.
உத்திரப்பிரதேசத்தில் சப்போட்டா, துஷேரி போன்ற வகையான மாம்பழங்களும், தென்னிந்தியாவில் இமபசந்த், அல்போன்சா, பகனப்பள்ளி, ராஸ்புரி, நீலம், ஒட்டு, மல்கோவா, கிளிமூக்கு, என்று பல்வேறு வகையான மாம்பழங்கள் கிடைக்கின்றன.







All the contents on this site are copyrighted ©.