2013-04-24 16:48:20

இந்தியாவின் முதல் இயேசு சபை பல்கலைக்கழகம்


ஏப்.24,2013. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் அடுத்த ஆண்டில் முதல் இயேசு சபை பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என இயேசு சபை அருள்பணியாளர் Paul Fernandes கூறினார்.
ஒடிசாவின் Bhubaneswarல் இயேசு சபையினரின் சேவியர் பல்கலைக்கழகம் தொடங்குவது குறித்து Business Standard தினத்தாளிடம் பேசிய அருள்பணியாளர் Paul Fernandes, ஒடிசா மாநில அரசிடம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட இத்திட்டம், அண்மையில் மாநில அவையில் விவாதிக்கப்பட்டு சேவியர் பல்கலைக்கழகம் மசோதா 2013 என்ற பெயரில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இதன்மூலம் இந்தியாவின் முதல் இயேசு சபை பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு வழி திறக்கப்பட்டுள்ளது என்றுரைத்த அருள்பணியாளர் Paul Fernandes, இவ்வாண்டு டிசம்பருக்குள் வளாகம் தயாராகிவிடும் என்றும், 2014ம் ஆண்டு ஜூலைக்குள் இது இயங்கத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.
இப்பல்கலைக்கழகத்தில் ஒடிசா மாணவர்களுக்கென 50 விழுக்காட்டு இடங்கள் ஒதுக்கப்படும் என்றும், இது அம்மாநிலத்துக்கான இயேசு சபையினரின் அர்ப்பணிப்பைக் காட்டுவதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
40 கோடி ரூபாய் செலவில் 2 இலட்சம் சதுர அடி நிலப்பரப்பில் சேவியர் பல்கலைக்கழகத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.