2013-04-24 17:05:10

அன்னைமரியா திருத்தலங்கள் – Monte Berico புனித மரியா திருத்தலம், இத்தாலி (The Shrine of St. Mary of Mount Berico)


ஏப்.24,2013. விச்சென்சா (Vicenza) நகரம், இத்தாலியின் வடகிழக்கில் வெனெத்தோ மாநிலத்தின் தலைநகராகும். உலகின் அழகிய நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் வெனிஸ் நகருக்கு மேற்கே ஏறக்குறைய 60 கிலோ மீட்டர் தூரத்திலும், இத்தாலியின் வணிக மாநகரமான மிலானுக்கு கிழக்கே 200 கிலோ மீட்டர் தூரத்திலும் இந்நகரம் அமைந்துள்ளது. வளமையான வரலாறு மற்றும் கலாச்சாரத்துக்குப் பெயர்போன விச்சென்சா நகரம் பலநாட்டவர் வந்து தங்கும் நகரமாக மாறி வருகிறது. பல அருங்காட்சியகங்கள், வளாகங்கள், பெரிய பெரிய வீடுகள், ஆலயங்கள் என இந்நகரம் பல கலாச்சாரச் செல்வங்களைக் கொண்டுள்ளது. இந்நகரிலுள்ள ஒலிம்பிக் நாடக அரங்கு("city of Palladio") 1994ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கல்வி, கலாச்சார மற்றும் அறிவியல் நிறுவனமான UNESCOவின் பாராம்பரிய வளங்களில் ஒன்றாக இணைக்கப்பட்டது. இந்நகரிலிருந்து ஏற்றுமதியாகும் பொருள்களின் மதிப்பை வைத்துப் பார்க்கும்போது, இந்நகரம் இத்தாலியின் மூன்றாவது பெரிய தொழிற்சாலை நகரமாகவும், நாட்டின் பணக்கார நகரங்களில் ஒன்றாகவும் உள்ளது. குறிப்பாக, இந்நகரிலுள்ள துணி மற்றும் எஃகுத் தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலை செய்கின்றனர். மேலும், இத்தாலியில் செய்யப்படும் தங்கம் மற்றும் பிற நகைகளில் ஐந்தில் ஒரு பகுதி விச்சென்சாவில் செய்யப்படுகின்றன. கணனி உதிரிப்பாகங்கள் செய்யும் தொழிற்சாலையும் இங்கு உள்ளது. சொல்லப்போனால், microprocessorக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான Federico Faggin என்பவர் விச்சென்சாவில் பிறந்தவர். 2008ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்நகரில் 1,15,927 பேர் வாழ்கின்றனர். இவ்வளவு புகழ்பெற்ற விச்சென்சா நகர், மொந்தே பெரிக்கோ அதாவது பெரிக்கோ மலையடிவாரத்தில் (Monte Berico) வடக்கில் அமைந்துள்ளது.

மொந்தே பெரிக்கோ அல்லது பெரிக்கோ என்ற மலையின் உச்சியில், விச்சென்சா நகரை நோக்கியபடியுள்ள புனித மரியா திருத்தலத்தின் வரலாறு 15ம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. 70 வயதான வின்சென்சா பசினி (Vincenza Pasini) என்ற வேளாண்மைத் தொழில் செய்து வந்த பெண்ணுக்கு 1426ம் ஆண்டு மார்ச் 7ம் தேதியும், 1428ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதியும் அன்னைமரியா காட்சி கொடுத்ததோடு இத்திருத்தலத்தின் வரலாறு தொடர்பு கொண்டது. வயலில் வேலை செய்து கொண்டிருந்த தனது கணவர் ஜொவான்னி தி மொந்தேமெட்சோவுக்கு மதிய உணவு எடுத்துச் சென்றபோது வின்சென்சாவுக்கு மொந்தே பெரிக்கோவில் அன்னைமரியா முதன்முறையாகக் காட்சி கொடுத்தார். அப்போது அன்னைமரியா வின்சென்சாவிடம், தன்னை மகிமைப்படுத்தும் விதமாக அவ்விடத்தில் ஓர் ஆலயம் கட்டுமாறு கேட்டுக்கொண்டார். அவ்வாறு கட்டினால் அந்நகரில் அப்போது பரவியிருந்த கொள்ளைநோய் பரவாமல் இருக்கும், இல்லையென்றால் தொந்தரவுகள் அதிக வன்முறைகளோடு மேலும் தொடரும் என்று சொன்னார். ஆனால் வின்சென்சா சொன்னதை ஆயரோ, அருள்பணியாளர்களோ நம்பவில்லை. கொள்ளைநோயின் கொடுமையும் தொடர்ந்தது. ஆயினும் அன்னைமரியா வின்சென்சாவுக்கு 1428ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதிவரை பலதடவைகள் காட்சி கொடுத்து தான் முதல் காட்சியில் சொன்னதை வலியுறுத்தி வந்தார்.

1428ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதியன்று வின்சென்சாவுக்கு அன்னைமரியா தோன்றினார். அச்சமயத்தில் விச்சென்சா நகரம் கொடிய துன்பங்களுக்கு உள்ளாகி சிதைந்திருந்தது. இந்தக் கடைசி காட்சியின்போதும் தான் முதல் காட்சியில் சொன்னதுபோல், தனக்கென அவ்விடத்தில் ஓர் ஆலயம் கட்டுமாறு வலியுறுத்தினார். அவ்வாறு அம்மலையில் கட்டும்போது அங்கு பாறையிலிருந்து தண்ணீர் ஊற்றெடுக்கும் என்றும் அன்னைமரியா கூறினார். இந்தக் கடைசி காட்சிக்குப் பிறகு அந்நகர ஆயர், அருள்பணியாளர்கள், நகரத் தலைவர்கள், ஆலோசனைக் குழுவினர் என 1500 பேர் கூடி பெரிக்கோ மலையில் விரைவில் ஆலயம் கட்டுவதற்குத் தீர்மானித்தனர். அதற்கு 24 நாள்கள் கழித்து ஆகஸ்ட் 25ம் தேதியன்று ஆயர் தலைமையில் அனைவரும் பெரிக்கோ மலைக்கு ஏறிச்சென்று ஆலயம் கட்டும் பணியைத் தொடங்கினர். அப்போது அங்கு பாறையிலிருந்து நீர் பெருக்கெடுப்பதைக் கண்டு அனைவரும் வியந்தனர். அம்மலையிலிருந்து தண்ணீர் ஆறாக, பெரும் சப்தத்துடன் பெருக்கெடுத்து ஓடியது. பல புதுமைகளும் நடந்தன. பலர் குணமாகினர். கொள்ளைநோயும் நின்றது. அதன் பின்னர் ஆயர் அக்காட்சி உண்மையென நம்பினார். மூன்று மாதங்களில் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் அப்பகுதி இன்றுவரை இறைவனின் அருளால் கொள்ளைநோயிலிருந்து முற்றிலும் காப்பாற்றப்பட்டுள்ளது.

ஒரு நூற்றாண்டு கழித்து அந்த நீர் ஊற்று வற்றிவிட்டது. ஆயினும் 1955ம் ஆண்டில் அவ்விடத்தில் புதிய துறவு சபை இல்லம் கட்டத் தொடங்கியபோது மீண்டும் நீர் ஊற்றிலிருந்து தண்ணீர் வந்தது. மொந்தே பெரிக்கோ திருத்தலம், தற்போது ஐரோப்பாவில் அன்னைமரியாவுக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள மிக்பெரிய திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது. ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிறன்று ஏறக்குறைய 22 ஆயிரம் பேர் ஒப்புரவு அருள்சாதனத்தைப் பெறுகின்றனர். இத்திருத்தலத்தை நிர்வகித்து வரும் மரியின் ஊழியர் சபை அருள்பணியாளர்களில் ஒருவர் கூறியபோது, சிலவேளைகளில் இரவு பத்துமணிவரைகூட ஒப்புரவு அருள்சாதனத்தைக் கேட்கவேண்டியிருக்கும் என்று தெரிவித்தார். மரியின் ஊழியர் சபையினர் 1435ம் ஆண்டுமுதல் இந்த அழகான, புனிதம் நிறைந்த மொந்தே பெரிக்கோ திருத்தலத்தை நிர்வகித்து வருகின்றனர். நூற்றாண்டுகளாக இந்தத் திருத்தலம், Palladio, Piovene, Miglioranza போன்ற புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர்களால் சீரமைக்கப்பட்டுள்ளது. அன்னைமரியாவை மேன்மைப்படுத்தும் விதத்தில் அங்குள்ள படிக்கட்டுகள் 1595ம் ஆண்டில் அமைக்கப்பட்டன. இத்திருத்தலத்தை அந்நகரத்தோடு இணைக்குமாறு அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் Francesco Muttoni என்பவரால் 1746ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி உருவாக்கப்பட்டன. இவை 150 வளைவுகளுடன் 10 பகுதிகளாக ஏறக்குறைய 700 மீட்டர் நீளத்தைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு பகுதியும் செபமாலையின் 15 பேருண்மைகள் மற்றும் 150 அருள்நிறைந்த மரியே செபத்தின் அடையாளமாக உள்ளது.

இயேசுவின் தாயாம் அன்னைமரியா தினமும் உலகெங்கும் செய்துவரும் அற்புதங்கள் அளவற்றவை. அத்தாயிடம் செல்வோம்.







All the contents on this site are copyrighted ©.