2013-04-23 15:57:15

விவிலியத் தேடல் – நல்ல சமாரியர் உவமை – பகுதி 10


RealAudioMP3 இயேசு பகர்ந்த வேறு எந்த உவமைக்கும் இல்லாத ஒரு தனித்துவம், ஒரு சிறப்பு அம்சம் 'நல்ல சமாரியர்' உவமைக்கு மட்டும் உண்டு. அதுதான், இந்த உவமையின் துவக்கத்திலும், இறுதியிலும் நிகழ்ந்த கேள்வி-பதில் பகுதிகள். உவமையின் துவக்கத்தில், திருச்சட்ட அறிஞரும், இயேசுவும் பரிமாறிக்கொண்ட கேள்வி-பதில் பகுதியை ஏற்கனவே நாம் சிந்தித்தோம். திருச்சட்ட அறிஞர் கேட்ட கேள்விகளுக்கு உள்நோக்கம் இருந்ததென்று நற்செய்தியாளர் லூக்கா தெளிவுபடுத்தியுள்ளார். இயேசுவைச் சோதிக்கும் நோக்கத்துடன் (லூக்கா 10:25) அறிஞர் தன் முதல் கேள்வியைத் தொடுத்தார். அக்கேள்விக்குத் தகுந்த பதிலை அவர் வழியாகவே இயேசு வரவழைத்தார். இருப்பினும், அறிஞர் தன்னை ஒரு நேர்மையாளர் என்று காட்ட விரும்பி (10:29) "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்ற கேள்வியை எழுப்பினார்.
மனித சமுதாயத்தின் மனசாட்சியை மீண்டும் மீண்டும் தட்டியெழுப்பும் கேள்வி - எனக்கு அடுத்திருப்பவர் யார்? ஏப்ரல் 14, ஞாயிறன்று இந்தியாவின் ஜெய்பூர் நகரில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரு தாயும் அவரது எட்டுமாதக் குழந்தையும் சாலையில் அடிபட்டு இரத்தம் இழந்துகொண்டிருக்க, அவ்வழியே சென்ற ஒவ்வொரு வாகன ஓட்டியிடமும் அடிபட்டிருந்த தந்தை உதவி கேட்டு கதற, முதல் அரைமணி நேரம் அவ்வழியே சென்ற ஒரு வாகனமும் நிற்காமல் சென்றன. தாயும், குழந்தையும் இறந்தனர்.
அடுத்தநாள், ஏப்ரல் 15, திங்களன்று அமேரிக்காவில் பாஸ்டன் நகர் மாரத்தான் பந்தயத்தின் இறுதியில் இரு குண்டுகள் வெடித்தன. மூன்று பேர் இறந்தனர், 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இவர்களில் 14 பேரின் நிலை இன்னும் கவலைக்கிடமாய் உள்ளது. இவ்விரு நிகழ்வுகளும் நம்மிடம் எழுப்பும் கேள்விகள் இவைதான்: யார் எனக்கு அடுத்திருப்பவர்? யாரை நான் நம்பமுடியும்? யாருக்கு நான் உதவி செய்ய வேண்டும்?
மனித குடும்பத்தை மீண்டும் மீண்டும் சுற்றிவரும் இக்கேள்விகளுக்கு எளிதான விடைகள் கிடைக்கப்போவதில்லை. எளிதான விடைகள் என்பதைக் காட்டிலும், உண்மையான விடைகள் என்னவென்று நாம் தேடவேண்டும். 'நல்ல சமாரியர்' உவமையின் இறுதியில் இயேசு எழுப்பிய கேள்வி இந்தத் தேடலை இன்று மீண்டும் ஆரம்பித்து வைக்கட்டும். "கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?" (லூக்கா 10:36)
இயேசுவின் கேள்வி குரு, லேவியர், சமாரியர் என்ற இந்த மூவரை மையப்படுத்தியதுதான் என்றாலும், அந்தக் கேள்வியில் அவர் கள்வரையும் குறிப்பிட்டது நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. "அடிபட்டுக் கிடந்தவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர்?" என்று இயேசு கேட்டிருந்தால், நமது எண்ணங்கள் அடிபட்டவரையும், அவ்வழியே சென்ற மூவரையும் சுற்றியே வலம் வந்திருக்கும். "கள்வர் கையில் அகப்பட்டவருக்கு..." என்று இயேசு தன் கேள்வியை ஆரம்பித்துள்ளார். எருசலேம் எரிகோ பாதையில் அடிபட்டுக் கிடந்தவரை, அந்நிலைக்கு உள்ளாக்கியவர்களை முதலில் நினைத்துப் பார்க்க இக்கேள்வி நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுவின் கேள்வியை ஓர் ஆரம்பமாகக் கொண்டு, நாம் ஒரு சமுதாயப் பகுப்பாய்வை மேற்கொள்ளலாம்.
எருசலேமிலிருந்து எரிகோவுக்கு பயணம் செய்த, அடையாளம் ஏதுமற்ற ஒரு மனிதருடன் பல வழிகளில் தொடர்பு கொண்டவர்கள்... கள்வர், குரு, லேவியர் மற்றும் சமாரியர். இவர்களின் எண்ண ஓட்டங்களை, Hampton Keathley என்பவர் இவ்விதம் விவரிக்கிறார்:
பயணம் செய்த மனிதரைப் பொறுத்தவரை...

இந்தச் சமுதாயப் பகுப்பாய்வில் இன்னும் சிறிது ஆழமாகச் சென்றால், மற்றொரு சங்கடமான கேள்வியும் எழுகிறது. அதுதான், இயேசு தன் உவமையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்தப் பாதை. எருசலேம் - எரிகோ பாதை இயேசுவின் காலத்தில் 'இரத்தப் பாதை' என்று அழைக்கப்பட்டது. அத்தனை உயிர் பலிகளும், இரத்தம் சிந்துதலும் நிகழ்ந்து வந்த அப்பாதையைச் சீரமைக்க, அல்லது அப்பாதையில் தேவையான பாதுகாப்பு கொடுக்க உரோமைய அரசு எவ்வித முயற்சியும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. அந்நிய நாட்டை ஆக்ரமிக்கும் எந்த அரசும், அந்நாட்டில் முன்னேற்றங்களை உருவாக்க முயல்வதில்லை. அந்நாட்டிலிருந்து எவ்வளவு தூரம் அபகரிக்க் முடியும் என்பதிலேயே குறியாக இருக்கும். வரிகளைச் சுமத்தி மக்களைக் கொள்ளையடித்த உரோமையர்களுக்கும், சாலையில் கொள்ளையடித்த கள்வர்களுக்கும் அதிக வேறுபாடு இல்லை என்று சொல்லலாம். ஒருவேளை, அந்தக் கள்வர்களுக்கும், உரோமைய அரசு அதிகாரிகளுக்கும் மறைமுக ஒப்பந்தங்கள் இருந்திருக்கலாம். ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இத்தகைய சமுதாயப் பகுப்பாய்வு இயேசுவின் நோக்கம் அல்ல என்றாலும், இயேசுவின் கேள்வி இந்த ஆய்வை மேற்கொள்ளத் தூண்டுகிறது.
இயேசு கேட்ட இந்தக் கேள்வியை ஒரு 'திறந்த கேள்வி' (Open Question) என்று சொல்லலாம். "கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?" என்று இயேசு கேட்டபோது, "என்னைப் பொருத்தவரை, அந்த குருவே அடுத்திருப்பவர் என்று எனக்குத் தோன்றுகிறது" என்ற பதிலை அறிஞர் சொல்லியிருக்கலாம். அத்தகையச் சுதந்திரத்தை இயேசு தன் கேள்வியில் உள்ளடக்கினார்.
உவமையின் ஆரம்பத்தில் திருச்சட்ட அறிஞர் கொண்டிருந்த மமதையான மனநிலையில் அவர் தொடர்ந்திருந்தால், ஒருவேளை அந்தக் குருவையும், லேவியரையும் ஆதரித்து அவர் வாதாடியிருப்பார். ஆனால், இயேசு கூறிய உவமை அவரில் ஓரளவு மாற்றத்தை உருவாக்கியது என்பதை அவர் தந்த பதில் வெளிப்படுத்துகிறது. "அவருக்கு இரக்கம் காட்டியவரே" (10:37) என்று பதில் சொல்கிறார். சமாரியரே இரக்கம் காட்டியவர் என்பதை உணர்ந்திருந்தாலும், 'சமாரியர்' என்ற சொல்லைப் பயன்படுத்த திருச்சட்ட அறிஞர் மறுத்தார். அந்தச் சொல்லைப் பயன்படுத்துவதற்கு, அவருக்குள் ஆழமாக வேரூன்றியிருந்த பாகுபாட்டு மனப்பான்மையும் தற்பெருமையும் இடம் தரவில்லை.
எது எப்படியாயினும், அவர் சரியான பதிலைச் சொன்னார் என்பதை உணர்ந்த இயேசு, "சரியாய் பதில் சொன்னீர்" என்று அவரைப் பாராட்டி அனுப்பிவிடாமல், தன் இறுதி அறிவுரையை அந்த அறிஞருக்கு வழங்கினார். "நீரும் போய் அப்படியே செய்யும்." (10:37)
இயேசுவிடம் கேள்வியுடன் வந்த திருச்சட்ட அறிஞர், தன் கேள்விகளுக்கு அறிவு சார்ந்த விடைகள் கிடைக்கும், எனவே தன் அறிவுத் திறமையையும் கூட்டத்திற்கு முன் நிரூபிக்கலாம் என்ற எண்ணத்துடன் இயேசுவிடம் கேள்விகளைத் தொடுத்தார். ஆனால், இப்போது ஒரு புதிய பிரச்சனைக்குள் அகப்பட்டார். ஆம், இயேசு இறுதியில் கூறிய வார்த்தைகள் அறிஞரை ஒரு புதிய பிரச்சனைக்குள் புகுத்தியது.
இயேசு வாழ்ந்த முதல் நூற்றாண்டில் 'ராபி' என்று அழைக்கப்பட்டவர்களுக்கும், அவரிடம் விளக்கங்கள் தேடி வந்தவர்களுக்கும் இடையே எழுதப்படாத ஒரு பழக்கம் விதிமுறையாக இருந்தது. அதாவது, 'ராபி'யிடம் ஒருவர் கேள்விகள் கேட்டு, அதற்கு 'ராபி' பதில் சொன்னால், அந்தப் பதிலில் அடங்கியுள்ளவாறு கேள்வி கேட்டவர் நடந்துகொள்ளவேண்டும். "நீரும் போய் அப்படியே செய்யும்." என்று இயேசு கூறியது திருச்சட்ட அறிஞரை ஒரு புதிய கடமையை ஆற்றப் பணித்தது.
என் அயலவர், அடுத்திருப்பவர் யார்? என்பது வெறும் அறிவுசார்ந்த விவாதம் அல்ல, அது செயல்வடிவில் வெளிப்பட வேண்டிய ஈடுபாடு என்பதை இயேசுவின் இறுதி ஆலோசனை அழுத்தந்திருத்தமாய்ச் சொல்கிறது. இன்றும் இந்தக் கேள்விக்குப் பதில் தேடிவருகிறோம். இந்த பதில் நம்மைச் செயலுக்கு அழைத்துச் செல்லும் என்பதை உணரும்போது, செயல்படத் தயங்கி, அதிலிருந்து விலகிக்கொள்ளும் நோக்கத்தோடு, நாம் வேறு கோணங்களில் கேள்விகள் எழுப்புகிறோம்.
எடுத்துக்காட்டாக, நல்ல சமாரியர் உவமையில் பாதையில் பயணம் மேற்கொண்ட அந்த மனிதர், அது ஆபத்தான பாதை என்பதை உணர்ந்து ஏன் தனியே பயணம் செய்தார்? அவருடைய பொறுப்பற்ற நடத்தையால், மற்றவர் மீது ஏன் பழி சுமத்தவேண்டும்? என்ற கேள்விகளை எழுப்பும் 'practical' மனிதர்களையும் காணலாம். இக்கேள்விகள் செயற்கைத் தனமாகத் தெரிந்தால், ஜெய்பூர் சாலை விபத்துக்குப் பின் நான் இணையத்தளத்தில் வாசித்ததை இங்கு குறிப்பிடுகிறேன்.
ஏப்ரல் 14, கடந்த ஞாயிறன்று, ஜெய்பூர் சாலை விபத்தில் உதவிகள் ஏதும் கிடைக்காமல் தாயும் குழந்தையும் இறந்தனர் என்பதை இணையத் தளச் செய்தியில் நான் வாசித்தபோது, அச்செய்திக்குக் கீழ் பலர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இவ்வித நிகழ்வுகள் மனித குலத்தையே அவமானத்துடன் நிற்க வைக்கிறது என்பதை பலர் கூறியுள்ளனர். இருந்தாலும், ஒரு சிலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர். தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்ற அந்த இளையவர், சட்டத்திற்குப் புறம்பாக தன் மனைவி, இரு குழந்தைகளை ஏன் எடுத்துச் சென்றார்? நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட அந்தச் சுரங்கப் பாதையில் அவர் ஏன் சட்டத்திற்குப் புறம்பாக தன் குடும்பத்துடன் இரு சக்கர வாகனத்தில் சென்றார்? அடிபட்டவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால், அவர்கள் உடனே ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்ற கேள்விகளும் அங்கு எழுப்பப்பட்டுள்ளன.
அடிபட்டு இரத்தம் இழந்துக் கொண்டிருந்த ஒரு தாயையும், குழந்தையையும் காப்பாற்றாமல் சென்ற வாகன ஓட்டிகளின் சார்பில் இந்தக் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது போல் தெரிகிறது. அடுத்தவர் யார், அவருக்கு நான் எப்போது, எவ்விதம் உதவிகள் செய்வது என்று கேள்விக்கு மேல் கேள்விகள் கேட்டுக்கொண்டே வாழ்வதற்குப் பதில், தேவையில் இருப்பவருக்கு உதவிகள் செய்ய நம்மால் முடியுமா? இயேசு அதைத்தான் கூறுகிறார். கேள்விகள் போதும், செயலில் இறங்குங்கள் என்று...
இயேசு இந்த உவமையின் இறுதியில் சொன்ன வரிகள் நமது தோளை உலுக்கி, முகத்தில் தண்ணீர் தெளித்து... தேவைப்பட்டால், முகத்தில் அறைந்து நம்மைத் தூக்கத்திலிருந்து, மயக்கத்திலிருந்து எழுப்பும் வரிகள்... "நீரும் போய் அப்படியே செய்யும்."
என்ன செய்ய வேண்டும்? அன்பு செய்ய வேண்டும்.
எப்படிச் செய்ய வேண்டும்? சமாரியர் செய்ததுபோல் செய்யவேண்டும். அதாவது,


"நீரும் போய் அப்படியே செய்யும்." நாமும் போய் அப்படியே செய்வோம்.









All the contents on this site are copyrighted ©.