2013-04-23 15:21:46

சிரியாவில் கடத்தப்பட்டுள்ள இரண்டு ஆயர்களின் விடுதலைக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் செபம்


ஏப்.23,2013. சிரியாவின் வடக்கில் இத்திங்களன்று கடத்தப்பட்டுள்ள இரண்டு ஆர்த்தடாக்ஸ் ஆயர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவதற்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செபித்து வருவதாக, திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்பணியாளர் பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
சிரியாவின் ஆர்த்தடாக்ஸ் ஆயர் Yohanna Ibrahim, சிரியாவின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பேராயர் Boulos al-Yaziji ஆகிய இருவரும், அந்நாட்டின் சண்டையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்வதற்காக அலெப்போவிலிருந்து சென்று கொண்டிருந்தபோது, துருக்கியின் எல்லையில் Kfar Dael என்ற கிராமத்தில் ஆயுதம் ஏந்திய புரட்சியாளர்கள் அவர்களது வாகனத்தை வழிமறித்து ஓட்டுனரைக் கொன்று இவ்விருவரையும் கடத்திச் சென்றுள்ளனர்.
இந்நிலவரம் குறித்து திருத்தந்தை மிகுந்த ஈடுபாட்டுடன் விசாரித்து வருவதாகவும், அவர்களின் விடுதலைக்காக உருக்கமாகச் செபிப்பதாகவும் அருள்பணியாளர் லொம்பார்தி கூறினார்.
சிரியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் சண்டையில் 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் இறந்துள்ளனர் என ஐ.நா. கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.