2013-04-22 17:11:51

திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவ சமூகங்களிலும்கூட வேறு வழியாக ஏறிக் குதிக்கும் திருடர்கள் உள்ளனர்


ஏப்.22,2013. இயேசு தங்களிடமிருந்து என்ன விரும்புகிறார் என்பதைக் கேட்குமாறு கத்தோலிக்க இளையோரிடம் இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், இளையோர் துணிச்சலுடன் இருக்குமாறும் வலியுறுத்தினார்.
இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளுக்கு அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை, இவ்வளாகத்தில் பல இளையோரைக் காண்கிறேன், உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன் என்று அக்கேள்வியை முன்வைத்தார்.
ஓர் ஆசை, படபடப்பான ஒருநிலை ஆகியவை மூலமாக, ஆண்டவர் தம்மை நெருங்கிப் பின்செல்லுமாறு அழைத்த அவரின் குரலை நீங்கள் சிலநேரங்களில் கேட்கவில்லையா? இயேசுவின் அப்போஸ்தலர்களாக ஆவதற்கான ஆவல் உங்களிடம் இல்லையா? என்று இளையோரிடம் கேட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இளையோர் உன்னத நோக்கங்களைத் தேடுமாறும், இயேசு அவர்களிடம் என்ன விரும்புகிறார் என்பதைக் கேட்டுத் துணிச்சலுடன் செயல்படுமாறும், இறையழைத்தல்களுக்காகச் செபிக்கும் இஞ்ஞாயிறன்று இளையோரிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில், சீனாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செபிக்குமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, வெனேசுவேலா நாட்டின் அரசியல் பிரச்சனைகள் சுமுகமாகத் தீர்வு காணப்படுமாறும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.