2013-04-22 16:54:14

கற்றனைத்தூறும்... உடல் நலமளிக்கும் முத்ரா பயிற்சி


உடலில் ஏற்படும் அனைத்துவித நோய்களுக்கும் நல்ல தீர்வாக முத்ரா பயிற்சி முறைகள் அமைகின்றன. உடலில் ஏதேனும் குறை இருந்தால் முதலில் அது தலைசுற்றலில்தான் ஆரம்பிக்கின்றது. இரத்தசோகை உள்ளவர்களுக்கும் இந்தப் பிரச்சனை ஏற்படும். இக்காலத்தில் 80 விழுக்காட்டுப் பெண்கள் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தலைசுற்றல், மனச்சோர்வு ஆகிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே, தலைசுற்றல் பிரச்சனையை சூன்ய முத்ரா என்ற பயிற்சியைச் செய்வதன் மூலம் சரிசெய்யலாம். இந்த சூன்ய முத்ரா பயிற்சியைச் செய்யும் முறை : நடுவிரலை மடக்கி கட்டைவிரலை அதன்மீது பதிய வைத்து மற்ற மூன்று விரல்களையும் நேராக நிமிர்த்தி வைக்க வேண்டும். இந்தப் பயிற்சியை தினமும் 45 நிமிடம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். காதுவலி, காதில் சீழ் வடிதல், சரியான முறையில் காது கேளாமை போன்ற குறைபாடுகளை இந்த முத்ரா பயிற்சி சரி செய்யும். அதுமட்டுமில்லாமல் பயண நேரங்களில் வரும் களைப்பு, தலைசுற்றல் ஆகிய பிரச்னைகளுக்குத் தீர்வாக இந்த முத்ரா பயிற்சி அமைகிறது.
அதேபோல், பிரித்வி முத்ரா பயிற்சி செய்வதன் மூலம் உடலை எப்போதும் புத்துணர்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள முடியும்.
பிரித்வி முத்ரா செய்யும் முறை: பத்மாசன முறையில் அமர்ந்து கொண்டு பெருவிரலை சற்று மடக்கி அதன் நுனியில் மோதிரவிரலை பதிய வைக்க வேண்டும். அப்போது நடுவிரல்கள் மூன்றையும் நேராக நிமிர்த்தி வைக்க வேண்டும்.
இந்தப் பயிற்சியைத் தினமும் 15 முதல் 20 முறைகள் செய்வதால் உடலிலுள்ள கூறுகள் சமப்படுத்தப்படுகின்றன. உடலை உறுதியுடன் வைத்துக் கொள்வதற்கும், நம்பிக்கையை அதிகப்படுத்துவதற்கும் இந்த முத்ரா பயிற்சி பயன்படுகிறது.

ஆதாரம் : தினமணி







All the contents on this site are copyrighted ©.