2013-04-20 16:08:14

திருத்தந்தை பிரான்சிஸ் : அரைகுறை கிறிஸ்தவர்கள் சிறிய சபைகளைக் கட்டுகிறார்கள்


ஏப்.20,2013. தங்களது போக்கின்படி திருஅவையைக் கட்டியெழுப்ப விரும்புகின்றவர்கள் அரைகுறை கிறிஸ்தவர்கள், இவர்கள் கட்டுவது இயேசுவின் திருஅவையை அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
புனித மார்த்தா இல்லத்தின் ஆலயத்தில் இச்சனிக்கிழமை காலை நிகழ்த்திய திருப்பலியில் ஆற்றிய சிறிய மறையுரையில் இவ்வாறு உரைத்த திருத்தந்தை, கிறிஸ்தவத்தின் அடக்குமுறைகளுக்குப் பின்னர் முதல் கிறிஸ்தவர்கள் அமைதியிலும் ஆண்டவர் மீதான பயத்திலும், தூயஆவியின் தேறுதலிலும் ஒன்றிணைந்து வாழ்ந்தார்கள், வளர்ந்தார்கள் என்று கூறினார்.
இந்த ஒரு சூழலிலே திருஅவை வாழ்கின்றது, உயிர்மூச்சை விடுகின்றது மற்றும் கடவுளின் பிரசன்னத்திலும் வாழ்வதற்கு அழைக்கப்படுகின்றது என்றுரைத்த திருத்தந்தை, கடவுளின் பிரசன்னத்தில் வாழும்போது கெட்ட காரியங்களைச் செய்ய மாட்டோம், தவறான தீர்மானங்களை எடுக்க மாட்டோம் என்றும் கூறினார்.
இயேசுவின் பேச்சு ஏற்றுக்கொள்வதற்கு கடினம் என்று சொல்லி அவரைவிட்டுச் சென்ற பல சீடர்கள் குறித்து விளக்கும் இந்நாளின் நற்செய்திப் பகுதியை விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ், இயேசுவிடம் செல்வோம், ஆனால் அவருக்கு நெருக்கமாக அல்ல என்று சொல்லும் கிறிஸ்தவர்கள், திருஅவையில் ஒன்றிணைந்து வாழாதவர்கள், அவர்கள் இறைப்பிரசன்னத்தில் வாழாதவர்கள் என்று கூறினார்.
இச்சனிக்கிழமை காலை திருத்தந்தை நிகழ்த்திய திருப்பலியில், வத்திக்கானிலுள்ள புனித வின்சென்ட் தெ பவுல் சகோதரிகள் நடத்தும் சிறார் மருந்தகத்தின் தன்னார்வப் பணியாளர்கள் கலந்துகொண்டனர். இம்மருந்தகம், தேவையில் இருக்கும் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு மதம், நாடு என்ற வேறுபாடின்றி 90 ஆண்டுகளாகச் சேவை செய்து வருகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.