2013-04-19 16:16:07

சிரியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவது குறித்த விவாதங்களைக் கைவிடுமாறு மேற்கத்திய நாடுகளுக்கு முதுபெரும் தலைவர் வேண்டுகோள்


ஏப்.19,2013. சிரியாவின் எதிர்தரப்புப் படைகளுக்கு ஆயுதங்கள் வழங்குவது குறித்த விவாதங்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக அந்நாட்டில் அமைதியைக் கொண்டுவருவதற்கு மேற்கத்திய நாடுகள் உடனடியாக முயற்சிகளில் இறங்குமாறு வலியுறுத்தியுள்ளார் சிரியாவின் முதுபெரும் தலைவர் Gregoire Laham.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வியாழனன்று சந்தித்த பின்னர் வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த முதுபெரும் தலைவர் 3ம் Laham, சிரியாவில் மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து திருத்தந்தையிடம் எடுத்துச் சொன்னதாகத் தெரிவித்தார்.
வருகிற ஜூனில் அமெரிக்க அரசுத்தலைவர் ஒபாமாவுக்கும், இரஷ்ய அரசுத்தலைவர் Vladimir Putinக்கும் இடையே இடம்பெறும் சந்திப்பு சிரியாவுக்கு ஏதாவது நன்மையைக் கொண்டுவரும் என்று மக்கள் எதிர்பார்ப்பதாகவும் முதுபெரும் தலைவர் Laham கூறினார்.
ஆயுதங்களை வழங்குவதா வேண்டாமா என்பதைத் தவிர வேறுவிதமாயச் சிந்திக்காமல் இருப்பது வருத்தமாக இருக்கின்றது என்றுரைத்த அவர், அமைதிக்கான நடவடிக்கைகள் குறித்து யாரும் உண்மையாகச் சிந்திப்பதில்லை என்று கூறினார்.
ஐ.நா.வின் கணிப்புப்படி, சிரியாவின் சண்டையில் 70 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர் மற்றும் 30 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் புலம்பெயர்ந்துள்ளனர் எனத் தெரிகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.