2013-04-19 16:05:41

சமுதாயத்தில் மிகவும் நலிந்தவர்களுக்குப் பணி செய்வோருக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் பாராட்டு


ஏப்.19,2013. சமுதாயத்தில் மிகவும் நலிந்தவர்களோடு நெருக்கமாக இருந்து அவர்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவி செய்வதற்கு முயற்சிக்கும் மக்களுக்குத் தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அர்ஜென்டினா நாட்டின் Buenos Aires சேரிகளில் வாழும் மக்கள்மீது கர்தினால் பெர்கோலியோவாகிய திருத்தந்தை பிரான்சிஸ் கொண்டிருந்த அன்புக்கு நன்றி சொல்லி கடிதம் அனுப்பிய Plaza de Mayo அன்னையர் கழகத்தின் தலைவர் Hebe de Bonafiniக்கு அனுப்பியுள்ள நன்றிக் கடிதத்தில் திருத்தந்தை இவ்வாறு பாராட்டியுள்ளார்.
தான் ஏற்றுள்ள இந்தப் பாப்பிறைப் பணியில், உலகில் வறுமை ஒழிப்புக்காகப் போராடுவதற்குத் தனக்கு இறைவன் சக்தியை அளிக்குமாறு செபிக்குமாறும் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அதேசமயம், பொதுநல வாழ்வுக்குப் பொறுப்பானவர்கள், உலகில் வறுமை என்ற வடுவைக் களைவதற்கு ஊக்கமுடன் செயல்பட வேண்டுமென்று தான் செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் நேரடிச் செயலர் பேரருள்திரு Antoine Camilleri, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில் இக்கடிதத்தை அனுப்பியுள்ளார்.
Plaza de Mayo அன்னையர் கழகம் என்பது, அர்ஜென்டினாவில் 1976ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரை இடம்பெற்ற இராணுவ சர்வாதிகார ஆட்சியில் காணாமற்போன குழந்தைகளின் அன்னையர் அமைப்பாகும். இவ்வமைப்பினர் 1977ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வியாழனன்றும் Casa Rosada என்ற அரசு அலுவலகத்தின்முன்கூடி அந்த இராணுவ ஆட்சியில் நடத்தப்பட்ட குற்றங்களுக்கு எதிராகத் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.