2013-04-18 16:37:05

"உலகில் இன்று காணப்படும் சமயச் சுதந்திரம்" - வத்திக்கானில் நடைபெறும் TEDx கருத்தரங்கு


ஏப்.18,2013. TEDx என்ற பெயரில் உலகின் பல நாடுகளில் தொடர்ந்து நடைபெற்றுவரும் கருத்தரங்களில் ஒன்று, ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை, வத்திக்கானில் நடைபெறுகிறது.
"உலகில் இன்று காணப்படும் சமயச் சுதந்திரம்" என்ற தலைப்பில் நடத்தப்படும் TEDx கருத்தரங்கு, பாப்பிறை கலாச்சார அவையின் ஒத்துழைப்புடன் இவ்வெள்ளியன்று வத்திக்கானில் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கின் ஆரம்பத்தில் பாப்பிறை கலாச்சார அவையின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi உரையாற்றுகிறார்.
சமயம் என்பது வெறும் வரலாற்றுச் சின்னம் அல்ல, மாறாக, அது நமது வாழ்வை இயக்கும் ஒரு சக்தி என்ற கருத்தில் பலர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றனர் என்று வத்திக்கான் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
Technology, Entertainment and Design என்ற வார்த்தைகளின் சுருக்கமாக விளங்கும் TED கருத்தரங்குகள், 1984ம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் துவக்கப்பட்டன.
புகழ்பெற்ற இக்கருத்தரங்குகளின் ஒரு கிளையாக உருவாக்கப்பட்ட TEDx கருத்தரங்குகள் இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளிலும் அண்மைய ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றன.
பல நாடுகளில் இருந்து வருகைதரும் 800க்கும் அதிகமானோர் கலந்துகொள்ளும் இக்கருத்தரங்கில், இடிந்து விழுந்த நியூயார்க் வர்த்தகக் கோபுரங்களின் இடத்தில் உருவாக்கப்படும் 'விடுதலை கோபுரத்தை' வடிவமைத்த David Libeskind, Gloria Estefan என்ற புகழ்பெற்ற பாடகர், Vlade Divac என்ற புகழ்பெற்ற கூடைப்பந்தாட்ட வீரர், ஆகியோர் உட்பட பல முக்கிய பேச்சாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.