2013-04-17 17:03:48

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


ஏப்ரல் 17, 2013. திருஅவை சிறப்பித்து வரும் விசுவாச ஆண்டில் நம் விசுவாச அறிக்கை குறித்து ஒவ்வொரு புதன் மறைபோதகத்திலும் நோக்கி வரும் நாம், இப்புதனன்று இயேசுவின் விண்ணேற்பு குறித்துக் காண்போம் என தன் புதன் மறைபோதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். 'அவர் விண்ணகத்திற்கு எழுந்துசென்று தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கிறார்' என அறிக்கையிடுகிறோம். விண்ணேற்றம் குறித்த மறையுண்மையை இயேசுவின் முழு வாழ்வின் ஒளியில் ஆழ்ந்து தியானிக்கும்படி புனித லூக்கா நமக்கு அழைப்பு விடுக்கிறார். விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே, தந்தையின் விருப்பத்திற்கு கீழ்ப்படியும் விதமாக மீட்பளிக்கும் பாடுகள் மற்றும் மரணத்தை அரவணைக்க எருசலேம் நோக்கிச் செல்ல இயேசு தீர்மானித்ததைப் பற்றிக் கூறுகிறார் புனித லூக்கா. புனித லூக்கா எடுத்துரைப்பதில் இரண்டு கோணங்கள் முக்கியமானவை. முதலாவது, தந்தையின் மகிமைக்குத் திரும்புவதற்கு முன்னால் தம் சீடர்கள் மீது கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார் உயிர்த்த இயேசு என லூக்கா நற்செய்தியின் இறுதி அதிகாரம் கூறுகிறது. இவ்வாறு ஆசி வழங்கியதன் வழி, அவர் நம் நிரந்தர குருவாகத் தோன்றுகிறார். உண்மையான கடவுளாகவும் உண்மையான மனிதராகவும் இருக்கும் அவர், இப்போதும் எப்போதும் தந்தையின் முன்னிலையில் நமக்காக பரிந்து பேசுகிறார். இரண்டாவது, இயேசுவின் ஆசியைப் பெற்ற சீடர்கள் அவரை வணங்கி விட்டுப் பெருமகிழ்ச்சியோடு எருசலேம் திரும்பிச் சென்றார்கள் என்கிறார் புனித லூக்கா. உயிர்த்த இயேசு, காணக்கூடிய வகையில் உடலளவில் தங்களோடு இல்லையெனினும், தான் மகிமையோடு மீண்டும் திரும்பி வரும்வரையில் திருஅவையை வழிநடத்தி தங்களோடு என்றும் இருப்பார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். விண்ணேற்பு எனும் மறையுண்மை குறித்து ஆழமாகத் தியானிக்கும் நாம், இயேசுவின் உயிர்ப்பு, நம்மிடையே அவரின் இருப்பு, அவரின் வாழ்வு, புனிதத்துவம் மற்றும் அன்பின் அரசாட்சியின் வெற்றிக்குச் சாட்சிகளாக விளங்குவோமாக.
இவ்வாறு தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, புனித அந்திரேயா பொபோலா, திரு அவையில் புனிதராக உயர்த்தப்பட்ட 75ம் ஆண்டு நிறைவையொட்டி போலந்திலிருந்து வந்திருந்த குழுவுக்குத் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இயேசுசபை மறைசாட்சியான புனித அந்திரேயா பொபோலா, போலந்து நாட்டில் ஒப்புரவுக்காகவும், திருஅவையின் ஒன்றிப்பிற்காகவும், விசுவாசத்திற்காகவும் தன் வாழ்வையே கையளித்ததை நினைவுகூர்ந்தார் பாப்பிறை. அதேவேளை, இறையன்னை துறவுசபையைத் தோற்றுவித்த புனித ஜொவான்னி லெயோனார்தி புனிதராக அறிவிக்கப்பட்டதன் 75ம் ஆண்டு சிறப்பிக்கப்படுவதையும் எடுத்துரைத்து வாழ்த்துக்களையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
ஈரானிலும் பாகிஸ்தானிலும் இடம்பெற்ற நில அதிர்ச்சி குறித்தும் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார். மரணங்களையும், துன்பங்களையும் அழிவையும் கொணர்ந்துள்ள இந்த நில அதிர்ச்சியால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக இறைவனிடம் செபிக்கும் அதேவேளை, ஈரான் மற்றும் பாகிஸ்தானின் மக்களோடு தன் அருகாமையை வெளிப்படுத்துவதாகவும் தன் மறைபோதகத்தின் இறுதியில் தெரிவித்தார் திருத்தந்தை. பின் அனைவருக்கும் தன் அப்போஸதலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.