2013-04-17 16:41:13

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டது இறைவன் வழங்கிய ஆச்சரியங்களில் ஒன்று - பிரான்ஸ் நாட்டு ஆயர் பேரவையின் தலைவர்


ஏப்.17,2013. முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகியதும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதும் திருஅவையின் வரலாற்றில் இறைவன் வழங்கிய ஆச்சரியங்கள் என்று பிரான்ஸ் நாட்டு ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் André Vingt-Trois கூறினார்.
ஏப்ரல் 16, இச்செவ்வாய் முதல் மூன்று நாட்கள் பாரிஸ் மாநகரில் நடைபெறும் பிரான்ஸ் ஆயர் பேரவையின் வசந்தகாலக் கூட்டத்தின் துவக்கத்தில் உரையாற்றிய பாரிஸ் பேராயர் கர்தினால் Vingt-Trois இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் கர்தினால்கள் மேற்கொண்ட பொது அவையும், கான்கிளேவ் சிறப்பு அவையும் செபம் நிறைந்த ஓர் அனுபவமாக இருந்ததென்பதை கர்தினால் Vingt-Trois தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.
'உரோமையின் ஆயர்' என்று திருத்தந்தை தன்னை அழைத்து வருவதைச் சிறப்பாக எடுத்துரைத்த கர்தினால் Vingt-Trois, உரோமையின் ஆயர் என்பதாலேயே அவர் அகில உலகின் மீதும் உரிமை கொள்கிறார் என்ற வரலாற்றை திருத்தந்தை நமக்கு நினைவுறுத்துகிறார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.