2013-04-17 16:45:26

சாலையோரக் குழந்தைகளுக்கு கல்வி வசதிகள் செய்து தருவதில் இஸ்பானிய நாட்டு கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு


ஏப்.17,2013. உத்திரப்பிரதேசத்தின் முக்கிய நகர்களில் ஒன்றான அலகாபாத்தின் சேரிகளில் வாழும் 3000க்கும் அதிகமான சாலையோரக் குழந்தைகளில் 800 பேருக்கு கல்வி வசதிகள் செய்து தருவதில் இஸ்பானிய நாட்டு கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனமான Manos Unidas ஈடுபட்டுள்ளது.
அண்மையில் கடைபிடிக்கப்பட்ட அகில உலக சாலையோரக் குழந்தைகள் நாளையொட்டி, Manos Unidas அமைப்பு, Fides செய்திக்கு அளித்த குறிப்பு ஒன்றில், 4 வயதுக்கும், 14 வயதுக்கும் உட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள உதவிகள் விவரிக்கப்பட்டுள்ளன.
அலகாபாத் நகரில் அமைந்துள்ள 20 கல்வி நிறுவனங்களில் 800க்கும் அதிகமான குழந்தைகள் கல்வி பயின்று வருவதாகக் கூறும் இக்குறிப்பில், குழந்தைகளின் பெற்றோர் மத்தியிலும் Manos Unidas மேற்கொள்ளும் விழிப்புணர்வு முயற்சிகள் கூறப்பட்டுள்ளன.
Slumdog Millionaire என்ற படத்தை இயக்கிய Danny Boyle போன்றவர்களின் ஆதரவுடன், 2011ம் ஆண்டு Consortium for Street Children என்ற அமைப்பு உருவாக்கிய அகில உலக சாலையோரக் குழந்தைகள் நாள், உலகெங்கும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 12ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.