2013-04-17 16:35:15

ஏப்ரல் 18, 2013. . கற்றனைத்தூறும்...... வானொலி


வானொலி என்பது ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்களைக் கொண்ட மின்காந்த அலைகளின்வழியாகத் தொடர்பு கொள்ளும் ஒரு கம்பியில்லாத் தொலைத்தொடர்பு ஊடகமாகும். மின்காந்த அலைகளின்வழிச் செய்தி, அறிவிப்பு, பாடல் மற்றும் உரையாடல் ஒலியலைகளை ஏற்றி வான் வழியே செலுத்தி ஆங்காங்கே மக்கள் அதை தங்களிடமுள்ள வானொலிப் பெட்டி வழியாகப் பெறுமாறு தொழில்நுட்பம் தொடங்கியதால் இதனை வானொலி என்பர். ஒலி அலைகளுடன் மின்காந்த அலைகளைக் கலந்து வானொலி நிலையங்களிலிருக்கும் மிக உயரமான கோபுரங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒலிபரப்பிகள் மூலம் வான்வெளியில் மின்காந்த அலைகளாக ஒலிபரப்பப்படுகின்றது. இப்படி ஒலிபரப்பப்பட்ட மின்காந்த அலைகளை, பயன்பெறுபவர்கள் தங்களிடம் உள்ள ஒலி வாங்கிகள் எனப்படும் வானொலிப் பெட்டியின் மூலம் கேட்டு மகிழ்கிறார்கள். வானொலிப் பெட்டிகள், வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்பட்ட மின்காந்த அலைகளை உள்வாங்கி, அதனூடே கலந்திருக்கும், ஒலி அலைகளை மட்டும் பிரித்தெடுத்து ஒலிபெருக்கி மூலம் வெளியிடுகின்றன.
இணையம் ஊடாக ஒலிபரப்பப்படும் வானொலி நிகழ்ச்சிகளை இணைய வானொலி எனலாம். அலைக்கம்பங்கள் துணையுடன் ஒலிபரப்படும் வானொலி நிகழ்ச்சிகளே இணையம் வழியாகவும் ஒலிபரப்படுவதுண்டு. இணையத்தின் ஊடாக மாத்திரம் ஒலிபரப்படும் நிகழ்ச்சிகளும் இன்று பரவலாகி வருகின்றன.
குலியெல்மோ மார்க்கோனி, வானொலியைக் கண்டு பிடித்தார். அவரே வத்திக்கான் வானொலி நிலையத்தையும் நிறுவினார். 1909ம் ஆண்டில் இயற்பியலுக்கான நொபெல் விருதை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார்.
1937ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் நாள் மார்க்கோனி காலமானபோது உலக வானொலி நிலையங்கள் அனைத்தும் இரண்டு நிமிட வானொலி மௌன அஞ்சலி செலுத்தின.
அகில இந்திய வானொலி நிலையம் 1936ம் ஆண்டு அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டது.
பிப்ரவரி 12, 1931. வத்திக்கான் வானொலி துவக்கப்பட்ட நாள்
பிப்ரவரி 13. ஐநாவின் உலக வானொலி தினம்








All the contents on this site are copyrighted ©.