2013-04-16 16:07:12

பாஸ்டன் நகர் குண்டு வெடிப்புக்குத் தலத்திருஅவைத் தலைவர்கள் கண்டனம்


ஏப்.16,2013. பாஸ்டன் நகரில் இத்திங்களன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் அறிவற்ற செயல்கள் எனக் கண்டித்துள்ள அமெரிக்கத் தலத்திருஅவைத் தலைவர்கள், அவ்வன்முறையில் பாதிக்கப்பட்டுள்ளோர்க்குத் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர்.
பாஸ்டன் பேராயர் கர்தினால் Seán O'Malley வெளியிட்டுள்ள அறிக்கையில், இதில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காகச் செபிக்குமாறு மக்களைக் கேட்டுள்ளார்.
இவ்வன்முறை இடம்பெற்றவுடனே துரிதமாக நிவாரணப் பணிகளில் துணிச்சலுடன் ஈடுபட்டுள்ள பாஸ்டன் அதிகாரிகளுக்குத் தனது பாராட்டையும் தெரிவித்துள்ளார் கர்தினால் Malley.
மேலும், இவ்வன்முறை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நியுயார்க் கர்தினால் Timothy Dolan, தீமை இன்னும் உலகில் நடமாடுகிறது மற்றும் மனித வாழ்வு ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காக நாம் அனைவரும் செபிக்குமாறுக் கேட்டுள்ளார் கர்தினால் Dolan.
பாஸ்டன் நகரில் இத்திங்கள் மாலையில் இடம்பெற்ற நாட்டுப்பற்றாளர் தினத்தையொட்டி நடைபெற்ற மாரத்தான் போட்டி முடியும் இடத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்துள்ளன. இதில் 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 144 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இம்மாரத்தான் போட்டியில் 27,000 பேர் கலந்து கொண்டனர் எனக் கூறப்படுகிறது.
இத்தொடர் குண்டுவெடிப்புகள் குறித்து ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.