2013-04-15 16:24:01

வாரம் ஓர் அலசல் – அனைத்து ஆயுதங்களிலும் வலிமை மிக்க ஆயுதம்


ஏப்.15,2013 RealAudioMP3 . Emil Joseph Kapaun என்ற அமெரிக்க ஐக்கிய நாட்டுக் கத்தோலிக்க அருள்பணியாளர் பற்றிக் கடந்த வாரத்தில் பல பன்னாட்டு ஊடகங்கள் மிகவும் பெருமையாகச் செய்திகளை வெளியிட்டன. அமெரிக்க ஐக்கிய நாட்டு இராணுவத்தினருக்கு வழங்கப்படும் Medal of Honour என்ற மிக உயரிய விருதை இந்த அருள்பணியாளருக்கு வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் கடந்த வியாழனன்று(ஏப்.11,2013) வழங்கினார் அரசுத்தலைவர் பாரக் ஒபாமா. இவ்வருள்பணியாளர் Emil Kapaun இன்று உயிரோடு இல்லாததால் அவரின் பெயரில் அவரது மருமகன் Ray Kapaun இவ்விருதைப் பெற்றார். இவ்விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அரசுத்தலைவர் ஒபாமா...
“கொரியப் போர் முடிந்ததன் 60ம் ஆண்டை இவ்வாண்டில் நினைவுகூருகிறோம். அப்போரின் முடிவில் ஆயிரக்கணக்கான வீரர்கள் அமெரிக்கா திரும்பினர். அவ்வீரர்கள், புனிதர் என மதிக்கும் அருள்பணியாளர் Emil Kapaun அவர்களின் நினைவாக நான்கு அடி நீள மரச்சிலுவையையும் கொண்டு வந்தனர். அங்கு கிடைத்த மரத்துண்டுகள், கம்பிகள் போன்றவற்றை வைத்து அவர்களே செய்த சிலுவை அது. அருள்பணியாளர் Emil Kapaun குறித்து அவ்வீரர்கள் பகிர்ந்து கொண்டதிலிருந்து என்னில் எழுந்த உணர்வுகள் என்னவெனில் அருள்பணியாளர் Emil Joseph Kapaun துப்பாக்கி ஏந்திச் சுடாத ஓர் அமெரிக்க இராணுவ வீரர், ஆனால் அனைத்து ஆயுதங்களிலும் சக்திமிக்கதோர் ஆயுதத்தை அவர் கொண்டிருந்தவர், அதுதான் அவர் சகோதரர்மீது கொண்டிருந்த அன்பு என்ற ஆயுதம். இவ்வன்பு எவ்வளவு வலிமைமிக்கதாய் இருந்ததென்றால், இப்பணியாளர், தனது சகோதரர்கள் வாழ வேண்டுமென்பதற்காகத் தனது உயிரையே கொடுக்கத் தயாராய் இருந்தவர். அருள்பணியாளர் Emil Kapaun அவர்களின் நம்புதற்கரிய செயல்கள் இந்த இடத்தோடு முடிந்து விடுவதில்லை” என்று நெஞ்சம் நெகிழ்ந்து பேசினார்.
RealAudioMP3 அருள்பணியாளர் Emil Kapaun, போர்க்களத்தில் பணி செய்தாலும், ஆயுதங்களைத் தொடாமல், ஆன்மீகப் பணிகளை மட்டுமே ஆற்றியவர். அமெரிக்க ஐக்கிய நாட்டு Kansas மாநிலத்தின் ஒரு சிறிய கிராமத்தில் Czech குடியரசின் குடியேற்றதாரப் பெற்றோருக்கு 1916ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி இவர் பிறந்தார். Wichitaவின் Newman பல்கலைக்கழகத்தில் 1940ம் ஆண்டில் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்ட Kapaun, 1944ம் ஆண்டு ஜூலையில் அமெரிக்க இராணுவத்தில் சேர்ந்தார். இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்காவின் தென்கிழக்கு ஆசிய இராணுவத்தளத்தில் சேவை செய்வதற்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். பின்னர் 1950ம் ஆண்டில் ஜப்பானின் Fuji மலையிலிருந்த அமெரிக்க இராணுவத்தில் ஆன்மீகக் குருவாகப் பணியைத் தொடர்ந்தார். அதே ஆண்டில் வட கொரியா, தென் கொரியாவை ஆக்ரமித்தபோது Kapaun தென் கொரியாவுக்கு அனுப்பப்பட்டார். 1950ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி தொடங்கிய கொரியச் சண்டையில், தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா போரிட்டது. வடகொரியாவுக்கு ஆதரவாக சீனாவும் அப்போதைய சோவியத் யூனியனும் போரிட்டன. இப்போரின்போது இறந்து கொண்டிருந்த அமெரிக்க வீரர்களுக்குத் திருமுழுக்கு, ஒப்புரவு அருள்சாதனம், திருநற்கருணை போன்ற திருவருள்சாதனங்களைக் கொடுப்பது, இராணுவ வாகனத்தின் முன்பக்கத்தைத் திருப்பலிப் பீடமாகப் பயன்படுத்தி திருப்பலி நிகழ்த்துவது, இரவில் வீரர்களுடன் செபமாலை செபிப்பது போன்ற ஆன்மீகச் சேவைகளைச் செய்துவந்தார். பல நாள் தூக்கத்தை இழந்தார். 1950ம் ஆண்டு நவம்பரில் வட கொரியாவின் Unsanவுக்கு அருகில் கைது செய்யப்பட்டு இவரும் மற்ற போர்க்கைதிகளும் Pyoktongக்கு அருகிலுள்ள கைதிகள் முகாமுக்கு 140 கிலோ மீட்டர் நடக்க வைத்தே கூட்டிச் செல்லப்பட்டனர். கைதிகள் முகாமில் கழிவறைகளைச் சுத்தம் செய்தார், வாக்குவாதங்களைத் தீர்த்து வைத்தார். தனது உணவை மற்றவர்களுக்குக் கொடுத்தார். படைவீரர்கள் மத்தியில் ஒழுக்கநெறி வாழ்வை மேம்படுத்தினார். கொரியப் போரின்போது அருள்பணியாளர் Kapaun செய்த இத்தகைய பல ஆன்மீக மற்றும் பிறரன்புச் செயல்கள் குறித்து அரசுத்தலைவர் ஒபாமா அவர்களே அவ்விருது வழங்கும் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.
“அருள்பணியாளர் Kapaun எத்தகைய பண்பாளர் என்பதை என்னால் உணர முடிகின்றது. ஒரு குழியில் காயமடைந்து கிடந்த முல்லர் என்ற அமெரிக்க வீரரரை சீனப் படைவீரர் சுட முயன்றபோது அவரைத் தள்ளிவிட்டு முல்லரை 4 மைல் தூரம் சுமந்து சென்று காப்பாற்றினார். கைதிகள் முகாமில் அமெரிக்க வீரர்கள் குளிரில் விறைத்து மரணத்தை எதிர்நோக்கியபோது Kapaun தனது ஆடைகளை அவர்களுக்குக் கொடுத்தார். கம்யூனிச சிறை அதிகாரிகளின் உணவுப்பொருள்களை எடுத்துவந்து பசியால் வாடிய வீரர்களுக்குக் கொடுத்தார். போர் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது குண்டுவெடிப்புச் சத்தங்களுக்கு இடையில் தனியொரு ஆளாக நின்று காயமடைந்த வீரர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு இழுத்து வந்தார். அவர்களின் காயங்களைச் சுத்தம் செய்து அவர்களைத் தேற்றினார். இறந்து கொண்டிருந்தவர்களுக்கு ஆறுதல் சொன்னார். இவர் பல படைவீரர்கள் உயிரோடு வாழ்வதற்கு உதவினார்.
அன்பர்களே, கைதிகள் முகாமில் அருள்பணியாளர் Kapaun தனது காலில் இரத்தக்கட்டி ஏற்பட்டு, வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியாவால் தாக்கப்பட்டார். எதிரிகள் இவருக்கு உணவும் மருந்தும் கொடுக்காமல் தனிமைப்படுத்தினர். இறுதியில் 1951ம் ஆண்டு மே 23ம் தேதி தனது 35வது வயதில் ஒரு போர்க்கைதியாக இறந்தார் அருள்பணியாளர் Kapaun. அமெரிக்கப் படைவீரர்கள் விடுதலையாகி வரும்போது இவர் நினைவாக அவர்கள் செய்த ஒரு மரச்சிலுவையை மட்டும் எடுத்து வந்தனர். கத்தோலிக்கத் திருஅவையில் புனிதர் என அறிவிப்பதற்கான முதல் கட்டமான இறையடியார் என இவர் தற்போது அறிவிக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறார். அரசுத்தலைவர் ஒபாமா சொல்லியிருப்பதுபோல இறையடியார் அருள்பணியாளர் Kapaun, சகோதர அன்பு என்ற சக்திமிக்க ஆயுதத்தைக் கொண்டிருந்தவர். கடந்த மார்ச் 13ம் தேதியன்று திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த ஒரு மாதத்துக்கு மேற்பட்ட நாள்களில் இறைவனின் அன்பையும், கருணையையும், மன்னிப்பையுமே தொடர்ந்து எடுத்துச் சொல்லி வருகிறார். திருத்தந்தை தான் தங்கியிருக்கும் இல்லத்தில் செய்துவரும் சிறுசிறு அன்புச்செயல்கள் குறித்துப் பலர் வியப்படைந்து வருகின்றனர். 13 வருடங்கள், 18 வருடங்கள் என ஆலயம் பக்கம் வராதவர்கள்கூட தாங்களாக ஆலயம் வரத் தொடங்கியுள்ளனர். இஞ்ஞாயிறு மாலை உரோம் புனித பவுல் பசிலிக்காவில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையிலும், நாம் அனைவரும் சொல்லாலும் செயலாலும் நமது வாழ்வில் சான்று பகருமாறு கேட்டுக்கொண்டார RealAudioMP3 ். அன்பர்களே, இத்தகைய சாட்சிய வாழ்வு வாழும் மனிதர் குறித்து கடந்த வாரத்தில்கூட செய்திகள் வெளியாகியிருந்தன.
இத்தாலியின் ஃப்ளாரன்ஸ் நகரை சேர்ந்த 62 வயதான பவ்லோ பெத்ரோத்தி என்பவர் இம்மாதம் 8ம் தேதி இரவில் தனது வீட்டில் திருடிய திருடர் ஒருவருக்கு இரக்கப்பட்டு வேலை வழங்கியுள்ளார். இவரது வீட்டில் புகுந்த மார்சிலோ என்பவர், காரில் இருந்த தாமிரக் கம்பிகளை திருடிக்கொண்டு ஓட முயன்றபோது அவரைப் பிடித்து, திருடிய பொருட்களை பறிமுதல் செய்தார். அதோடு, வேலை இல்லாததால், மனைவியின் ஓய்வூதியத்தில் பிழைப்பு நடத்துவதாகவும், அந்த பணம் போதுமானதாக இல்லாததால் திருடியதாகவும் மார்சிலோ கூறியதால் அவரை விடுவித்தார் பெத்ரோத்தி. மார்சிலோவின் வீட்டு முகவரியை வாங்கி கொண்ட அவர், மறுநாள் அவருக்கு கடிதம் எழுதி, தன் வீட்டில் வேலை செய்ய வருமாறு அழைத்தார். மார்சிலோவும் திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு, தற்போது கிடைத்துள்ள தொழிலை மகிழ்வோடு செய்து வருகிறார்.
தமிழக மீனவர்கள் தமிழகக் கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தால்கூட அவர்களைத் தாக்கி வலைகளை அறுத்து சேதப்படுத்தி, மீன்களை அள்ளிக்கொண்டு விரட்டியடிப்பது இலங்கை கடற்படையின் வழக்கம். ஆனால், திசைமாறி கோடிக்கரைக்கு வந்த 2 இலங்கை மீனவர்களை, தமிழக மீனவர்கள் வரவேற்றதோடு, அவர்களின் பசியையும் போக்கியுள்ளனர். மேலும், அவ்விருவரையும் இந்திய கடற்படையினர் இலங்கை கடல் எல்லையில் இருந்த இலங்கை கடற்படையினரிடம் முறைப்படி ஒப்படைத்தனர் என்பது கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியான செய்தி.
அண்மையில் சுட்டெரிக்கும் வெயிலில் சென்னை, தியாகராய நகர் பேருந்து நிலையத்துக்கு மார்க்கெட் வழியாகச் சென்ற 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடக்க முடியாமல் தள்ளாடி நடைபாதையில் மயங்கி விழுந்தார். அவரது சட்டைப்பையில் இருந்த, 100 ரூபாய்த் தாள்கள், கீழே விழுந்து சிதறின. அவ்வழியாகச் சென்ற பலரும், சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனரே தவிர, யாரும் உதவ முன்வரவில்லை. ஆனால் நடைபாதையில் பிச்சை எடுத்தவர், முதியவரைப் பார்த்ததும், பதறிப்போய், தட்டில் கிடந்த காசை எடுத்து, தண்ணீர் பாக்கெட் வாங்கி வந்து, முதியவர் முகத்தில் தெளித்தார். காற்றோட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தி, குடிக்கத் தண்ணீர் கொடுத்தார். சிதறிய ரூபாய்த் தாள்களை, முதியவரின் சட்டைப்பையில் வைத்து, உட்கார வைத்தார். பின்னர் முதியவருக்கு பலரும் உதவியதால், கூட்டத்தில் இருந்து விலகிச் சென்ற பிச்சைக்காரர், தட்டை ஏந்தியபடி, தனது தொழிலைச் செய்ய தயாரானார். இவ்வுதவிக்கு வெகுமதியாகக் கிடைத்த நூறு ரூபாயையும் அவர் பெற்றுக்கொள்ளவில்லை.
அன்பர்களே, வயதான ஒருவர் தனக்கு 68 வயதில் நிச்சயம் மரணம் நிகழும் என்று நினைத்து அதை வீட்டார் அனைவருக்கும் அறிவித்தார். சொத்துக்களைப் பகிர்நது கொடுத்தார். தான் செய்ய நினைத்த அனைத்தையும் செய்தார். அவர் 68 வயதை நெருங்கியபோது அவரது பேரனுக்கு விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் பேரன் அருகிலே இருந்து பணிவிடைகள் செய்தார். அன்பைக் காட்டினார். அச்சிறுவனால் எழுந்து நடக்கமுடியும் என்ற நம்பிக்கையை ஊட்டினார். இப்பணிவிடையில் தனது 68வது பிறந்த நாளையே மறந்தார். சிறுவன் குணமானான். அவன் அவரிடம், தாத்தா, இன்று உங்களுக்கு 69வது பிறந்த நாள் என்றான். தாத்தா 70யும் தாண்டி பூரணமாக வாழ்ந்தார். அவரது ஆயுள் நீடித்து இருந்ததற்குக் காரணம் அவரிடமிருந்த பலமான அன்பே. ஆம் அன்பர்களே, அன்பு மட்டுமே எதற்கும் அருமருந்து. அன்பு மட்டுமே எதனையும் குணமாக்கும் நிவாரணி. அன்பு மட்டுமே அனைத்து ஆயுதங்களிலும் வலிமை மிக்க ஆயுதம். இன்று நாம் ஒவ்வொருவரும் ஒரேயோர் அன்புச் செயலையாவது செய்துவிட்டு உறங்கச் செல்வோமா.







All the contents on this site are copyrighted ©.